“யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 25 வைத்தியசாலைகளில் தற்போதுவரை வைத்தியர்கள் இல்லை, அவர்கள் பின்தங்கிய பிரதேசங்களுக்குச் செல்ல மறுக்கின்றனர்” இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துரைத்தார் யாழ்ப்பாணப் பிராந்திய வைத்திய அதிகாரி. 

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதமர் தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விடையத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள 25 வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்கள் இல்லை. 5 ஆதார வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இல்லை. கிராமப்புற வைத்தியசாலைகளுக்குச் செல்ல வைத்தியர்களுக்கு விருப்பம் இன்மையே இதற்குக் காரணம்”என்று வைத்திய அதிகாரி தெரிவித்தார். 

“வெறுமனே நகரப்புறங்களில் உள்ள வைத்தியசாலைகளின் கட்டடங்களைக் கட்டுவதால் எந்தப் பயனும் இல்லை. கிராமப்புற வைத்தியசாலைகளில் வைத்தியர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். அங்கு பணிபுரிய விரும்பும் வைத்தியர்களுக்கு மேலதிக சலுகைகளை வழங்கவேண்டும். அதன் ஊடாகவே வைத்தியர்கள் அங்கு சென்று பணிபுரிவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்த முடியும்” என்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் குறிப்பிட்டார்.