ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 63 பேர் எதிர்வரும் 30 திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர். 

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட  ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 63 பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 30 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று வெள்ளிக்கிழமை  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. றிஸ்வான் உத்தரவிட்டார்.

குறித்த குண்டு தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதிகள் மேற்கொண்டனர். இந்த  சம்பவத்தையடுத்து சஹ்ரானின் ஊரான காத்தான்குடி பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் இராணுவத்தினர், பொலிஸார் , சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியதுடன் அந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் என அந்த பகுதியைச் சேர்ந்த 64 பேர்வரை கைது செய்தனர் .

இதில் கைது செய்யப்பட்ட 64 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர் இதனைத் தொடர்ந்து அதில்  ஒருவர் நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் ஏனைய 63 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இவ்வாறு வியக்கமறியலில் வைக்கப்பட்டவர்களை இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 30 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.