இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் ஆரம்பமாகியுள்ள நிலையில், இன்றிரவு 7.00 மணிக்கு இந்திய அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்ய முன்னாள் இந்திய அணியின் தலைவர் கபில்தேவ் தலைமையில் 3 பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த குழுவில் முன்னாள் வீரர் அன்ஷூமான் கெய்க்வாட், முன்னாள் வீராங்கனை சாந்தா ரங்கசாமி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்காக வந்த விண்ணப்பத்தை பரிசீலித்த இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல் வீரர் டொம் மூடி, மேற்கிந்திய அணியின் முன்னாள் வீரர் ரவுண்டர் பில் சிம்மன்ஸ், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மேலாளர் லால்சந்த் ராஜ்புத், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் களத்தடுப்பு பயிற்சியாளர் ராபின்சிங் மற்றும் ரவி சாஸ்திரி உள்ளிட்ட 6 பேரை தேர்வு செய்துள்ளது.  

இந்த 6 பேரை  மட்டும் அழைத்து நேர்காணல் நடத்த திட்டமிட்டுள்ளனர். தற்போதைய பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் பெயரும் இந்த பதவிக்கு நேரடியாக பரிசீலிக்கப்படும். 

இவர்களில் ஒருவரை, கபில்தேவ் தலைமையிலான தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்த பின் நியமிக்கும். 

இந் நிலையில் இன்று இடம்பெறும் நேர்காணலின் பின்னர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரை பி.சி.சி.ஐ. இன்று இரவு 7மணிக்கு அறிவிக்கவுள்ளது.