நடிகர் ஜீவா நடித்து வரும் திரைப்படத்திற்கு சீறு என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

கீ, கொரில்லா ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் ஜீவாவின் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் சீறு. இந்த படத்தில் ஜீவாவுடன் புதுமுக நடிகை ரியா சுமன், தெலுங்கு நடிகர் நவ்தீப் ஆகியோர் நடிக்கிறார்கள். இதில் நடிகர் நவ்தீப் தமிழில் வெளியான அறிந்தும் அறியாமலும், தல அஜித் நடித்த ஏகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

 இவர் இந்த படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வருகிறர் ரத்ன சிவா. இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான றெக்க என்ற படத்தை இயக்கியவர்.

படபிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் ரத்னசிவா. இதனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரித்திருக்கிறார். இந்த படம் ஒக்டோபரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே நடிகர் ஜீவா தற்போது இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் ‘ஜிப்ஸி’ என்ற படத்திலும், நடிகர் அருள் நிதியுடன் இணைந்து ‘களத்தில் சந்திப்போம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.