காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு. மக்களின் கவனத்தை திசை திருப்புவதாக மத்திய அரசு மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ரி. ராஜா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 

“370 ஆவது அரசியலமைப்பு சட்டத்தை இரத்து செய்வதாக கூறி ஜம் மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை இன்று இல்லாமலாக்கிவிட்டனர். இது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய தாக்கு தலாகும். ஜம் மு காஷ்மீரில் அமைதி ஏற்படவில்லை. மக்கள் கொந்தளிப்புடன் தான் இருக்கிறார்கள். அங்கு என்ன நடக்கப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது அங்கு எப்போது தேர்தல் நடத்த விருக்கிறார்கள் என்பதை அரசு தெளிவுபடுத்தவேண்டும்.

பிரதமர் மோடி அரசு எடுத்துள்ள முடிவு ஜம் மு-காஷ்மீர் மாநில மக்களின் நலனுக்காக எடுத்த முடிவா? அல்லது கொர்ப்பரேட் நிறுவனங்களில் கொள்ளை இலாபத்திற்காக எடுக்கப்பட்ட முடிவா..? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். 

நலிந்து போயிருக்கும் பொருளாதாரம், பெருகி வரும் வேலையில்லா திண்டாட்டம், விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி போன்றவை பற்றி மக்கள் பேசக் கூடாது. அதற்கு மாறாக தேசியம், தேசிய பாதுகாப்பு, ஜம் மு-காஷ்மீர் என்ற பெயரால், நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கில் தான் மோடி அரசு செயற்பட்டு வருகிறது.” என்றார்.