(நா.தனுஜா)

இலங்கை புகையிரதசேவை செயற்பாடுகளின் செயற்திறனை அதிகரிப்பதன் ஊடாக அச் சேவையை நவீனமயப்படுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 160 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்கியிருக்கிறது.

இலங்கையின் புகையிரதசேவை அபிவிருத்திக்கென ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் முதலாவது கடனுதவி இதுவாகும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் 2050 ஆம் ஆண்டாகும் போது அதன் சனத்தொகை 25 மில்லியனாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

எனவே இத்தகைய சனத்தொகை அதிகரிப்பிற்கு ஈடுகொடுப்பதற்கு அதன் பொதுப் போக்குவரத்துச்சேவையின் தரத்தை மேம்படுத்த வேண்டிய தேவையுள்ளது என்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் போக்குவரத்துப் பிரிவு விசேடநிபுணர் ஜொஹான் ஜோர்ஜெட் தெரிவித்தார். 

அத்தோடு முன்னேற்றகரமாக புகையிரதப் போக்குவரத்து ஏனைய சேவை அபிவிருத்திகளுக்கும், நாடளாவிய ரீதியிலான கைத்தொழில் மேம்பாட்டிற்கும் உறுதுணையாக அமையும் என்பதுடன் சாத்தியமானதும், வசதியானதுமான போக்குவரத்து என்ற தெரிவை மக்கள் மனங்களில் ஏற்படுத்தவும் முடியும் என்றும் கூறினார்.