லோட்சில் இடம்பெற்றுவரும் ஆசஸ் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர்களிற்கு எதிராக அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் அதிகளவில் பவுன்சர் பந்துகளை பயன்படுத்தியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் பட் கமின்ஸ் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களை பவுன்சர் பந்துகள் மூலம் தாக்கியுள்ளார்.

இங்கிலாந்தின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோயை மூன்று முறை கமின்ஸ் பவுன்சர் பந்தினால் தாக்கியுள்ளார்.

கிறிஸ்வோக்சின் தலைக்கவசத்தினை பவுன்சர் பந்தினால்  பதம் பார்த்த கமின்ஸ் இங்கிலாந்து அணியின் பின்வரிசை  துடுப்பாட்டவீரர்களிற்கும் பவுன்சர் பந்துகளை வீசியுள்ளார்.

தனது முதல் டெஸ்டில் விளையாடும் ஜொவ்ரா ஆச்சரையும் பவுன்சர் பந்தின் மூலம் கமின்ஸ் அச்சுறுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் ஜொஸ் ஹசெல்வூட் இங்கிலாந்தின் ஜோ டென்லியின் ஹெல்மட்டினை பதம் பார்த்துள்ளார்.

ஆக்ரோசமான களத்தடுப்பு வியூகத்தினை வகுத்த அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பவுன்சர் பந்துகளை வீசிய வேளை  இங்கிலாந்தின் ரசிகர்கள் கூச்சல் எழுப்பினர் எனினும் அதனை அலட்சியம் செய்த  அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் தொடர்ந்தும் பவுன்சர் பந்துகளை வீசினர்.

ரொரி பேர்ன்சை தொடர்ச்சியாக பவுன்சர் பந்தினால் தாக்கிய கமின்ஸ் பின்னர் அவ்வாறான ஒரு பந்தின் மூலம் அவரை ஆட்டமிழக்க செய்தார்.

இதேவேளை  பவுன்சர் பந்துகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரொரி பேர்ன்ஸ் அவுஸ்திரேலியாவின் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களும்  பவுன்சர் பந்துகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார்.

ஆச்சர் பவுன்சர் பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டுள்ளார் அதேவேளை அவர் பவுன்சர் பந்துகளை வீச திட்டமிட்டுள்ளார் என ரொரி பேர்ன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.