ஜப்பானை 'குரோசா' என்கிற புயல் தாக்கியதை தொடர்ந்து ஹிரோஷிமா மாகாணத்தில் நேற்றைய தினம் வீசிய பலத்த காற்றுக்கிடையில் படகில் சென்ற 82 வயதான வயோதிபர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, குறித்த புயலால் 49 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று 4 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டிருந்தனர். மேலும் புயல் எச்சரிக்கை காரணமாக 800 விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஹோன்சு தீவில் ஹிரோஷிமா நகருக்கு அருகே உள்ள குரோ நகரில் பலத்த புயல் காற்று தாக்கியது. இதற்கு 'குரோசா' என பெயரிடப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசியதுடன் இடைவிடாத மழையும் பெய்துள்ளது.

மழையால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், மின் கம்பங்கள் அடியோடு சரிந்து வீழுந்துள்ளன. கனமழையால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சிலஇடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.