தற்காப்புக்கலை மனிதனது சுயபாதுகாப்பு மற்றும் உளரீதியான வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றுவதாக சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரநெசனல் ஸ்ரீலங்காவின் பிரதம ஆசிரியரும் கராத்தே ஒவ் ஜப்பான் பெடரெசன் இன்ரநெசனல் வெளிவிவகார பணிப்பாளருமான சென்செய் அன்ரோ டினேஸ் தெரிவித்தார்.

சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரநெசனல் ஸ்ரீலங்காவின் பிரதம ஆசிரியரும் கராத்தே ஒவ் ஜப்பான் பெடரெசன் இன்ரனசனல் வெளிவிவகார பணிப்பாளருமான சென்செய் அன்ரோ டினேஸ் வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணல் வருமாறு,

1)  நவநாகரீக உலகில் தற்காப்புக் கலையின் முக்கியத்துவம், இலங்கையில்  தற்காப்புக் கலையின் வளர்ச்சி எவ்வாறு காணப்படுகின்றது ? 

தற்காப்புக்கலை என்பது ஒரு பொதுவான பதமாகும். இன்று சர்வதேச அளவில் ஏன் நம் நாட்டிலும் இது பிரபல்யம் அடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இன்றைய உலகில் பல்வேறு காரணங்கள் மற்றும் பொருளாதார தேவைகளுக்கமைய மக்கள் பரபரப்பான வாழ்க்கை முறைக்கு தள்ளப்படுவதை காணமுடிகின்றது. 

கல்விக்காகவோ, தொழில் துறைக்காகவோ தனித்து சென்று வாழ வேண்டிய சூழ்நிலையும் காணப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் தற்காப்புக்கலை ஒரு தன்னம்பிக்கையும் மனத்திடனையும் உடல் பலத்தினையும் தொடரான சீரான  முறையான பயிற்சிகளின் நிமித்தம் நோய்களினின்று விலக்கையும் மன ஆறுதலையும் தரக்கூடிய அருமருந்தாக விளங்குகின்றது.

2) சிறுவர்கள், பெண்கள் வயது வந்தோருக்கான பயிற்சிகள், உங்கள் படாத்திட்டங்கள் பற்றி பகிர்ந்து கொள்ள முடியுமா?

இலங்கையின் தற்காப்புக்கலை வளர்ச்சியை நோக்குகையில் விளையாட்டுத்துறை அமைச்சிற்குட்பட்ட தேசிய கராத்தே தோ சம்மேளனம் பல்வேறுப்பட்ட நடவடிக்கைகளை முன்னேடுத்து வருகின்றது. 

கராத்தே கலையை ஒரு தற்காப்பாக மாத்திரமின்றி ஒரு விளையாட்டாக ஊக்குவித்து பல்வேறுபட்ட சுற்றுப்போட்டிகளை மாவட்ட மாகாண தேசிய ரீதியில் ஒழுங்கமைத்து நடத்தி வருகின்றது. 

பாடசாலைகள் கராத்தே தோ சங்கமும் அதன் செயற்பாடுகளை பாடசாலை மாணவர்கள் மத்தியில் விஸ்தரித்து வருகின்றது. இலங்கையில் பல பாடசாலைகள் கூட தமது கல்வி செயற்பாட்டிற்கு மேலதிகமாக கராத்தே வகுப்புகளை நடாத்துவதற்கு முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். 

பெற்றோர்களும் தமது பிள்ளைகளை ஊக்குவிக்கும் காலமும் மலர்ந்து வருகின்றது. இதைவிட பாடசாலை மட்டத்திலான மாவட்ட, மாகாண, தேசிய சுற்றுப்போட்டிகளும் ஆண்டுதோறும் நடாத்தப்படுகின்றன.

3) நம் நாட்டிற்கும் வெளிநாட்டின் கராத்தே தரங்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை கூறுங்கள் ? 

கராத்தே கற்பதற்கு வயதெல்லையோ, ஆண், பெண் வேறுபாடுகளோ கிடையாது. கராத்தே கலை உண்மையிலே ஒரு தற்காப்புக்லையாக தான் பரிணாமம் பெற்றது. அதன் பாரம்பரியமும் தத்துவமும் அதுவாகவே அமைகிறது.

ஆனால் இன்று ஒரு விளையாட்டாகவும் அறிமுகப்படுத்தப்பட்டு சர்வதேச ரீதியில் போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றது. சிறுவர்கள் கராத்தே கலையில் மிகவும் ஆர்வம் காட்ட இதுவும் ஒரு காரணம்.

உலக கராத்தே சம்மேளணம் WKF கராத்தே சுற்றுப்போட்டிகளுக்குரிய விதிமுறைகளை வகுத்து நெறிப்படுத்தி “Sports Karate” எனும் கருவில் நிகழ்ச்சி நிரலை நெறிப்படுத்தி வருகின்றது. இதனால் மிகவும் பாதுகாப்பாக சிறுவர்கள் கராத்தே பயிற்சிகள் போட்டிகளில் ஈடுபட முடியும்.

சிறுவர்களை பொருத்தவரையில் அவர்களது ஒழுக்கம், பாடசாலை கல்வி, விளையாட்டு இதர பாடசாலை நடவடிக்கைள் மையமாகக் கொண்டு கராத்தே பயிற்சிகள் அமைய வேண்டும்.

பயிற்சியகம், பயிற்றுனர், சிரேஸ்ட அங்கத்தவர், இதர மாணவர்களுக்கு வணக்கம் செலுத்தும் பாடத்திட்டங்கள் சிறுவர்கள் தங்கள் ஆசிரியர்,  பெற்றோர், பெரியோர்க்கு மரியாதை செலுத்தும் தன்மையை ஆரம்பத்திலிருந்தே பழகுவதற்கு வழிகோலும். 

மேலும் அடிப்படை தியான பயிற்சிகள் பொறுமை, நிதானம் போன்றவற்றை விடயங்களையும், காட்டா எனும் கற்பனை அமர்வுகள் சிறுவர்களின் ஞாபக சக்தியையும் வளர்க்க பெரிதும் பங்களிக்கும்.

பெண்களை எடுத்துக்கொண்டால் தங்களால் தங்களை தற்காக்க முடியும் என்ற தன்னம்பிக்கை உருவாகும். மேலும் விழிப்புணர்வுடன் செயற்படவும், ஆபத்துகளை இனங்கண்டு தப்பித்துக்கொள்ளவும், உடல் உள பலத்தை உறுதிப்படுத்தவும் கராத்தே கலை உதவும்.

கராத்தேயில் வழங்கப்படும் தரங்கள் இலங்கையிலும் சரி வெளிநாடுகளிலும் சரி ஒரே கட்டமைப்பில் தான் அமைகின்றது. 

கராத்தே சுற்றுப்போட்டிகளும் பொதுவாக உலக கராத்தே சம்மேளனத்தின் விதி முறைகளுக்கு அமையவே நடாத்தப்படுகின்றது. இலங்கையின் தேசிய கராத்தே தோ சம்மேளனமும் உலக கராத்தே சம்மேளனத்தின் விதி முறைகளையே நடைமுறைப்படுத்தியுள்ளது.

கராத்தே கலையினுடைய நுட்பங்களின் தரத்திலும் நம் நாட்டவர்கள் வெளிநாட்டவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல. அவ்வாறே கராத்தே மத்தியஸ்தர், நடுவர் தரத்திலும் நம் நாட்டின் நடுவர்கள் மற்றும் மத்தியஸ்தர்களின் தரம் உறுதியாகவே காணப்படுகின்றது. 

வெளிநாடுகளில் நடைபெறும் சர்வதேச சுற்றுப்போட்டிகளில் நம் நாட்டின் தேசிய நடுவர்கள் சிறப்புற செயற்பட்டு வருகின்றமை இதற்கு சான்றாகும்.

4) வெளிநாடுகளில்  நீங்கள் பெற்ற அனுபவங்கள் தொடர்பாகவும் அங்கு நீங்கள் வழங்கி வரும் பயிற்சிகள் பற்றி ? 

இந்தியா, மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் கராத்தே விற்பனர்களிடம் கராத்தேயின் உயர் நுட்பங்களையும் சிங்கப்பூரில் கராத்தே நடுவர் தொடர்பான பயிற்சிகளையும், அமெரிக்காவில் Karate of Japan Federation International தலைமையகத்தில் உயர்பயிற்சிகளையும் பெற்றுள்ளேன்.

இந்தியா, மலேசியா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற போட்டிகளில் பங்கெடுத்து பதக்கங்களை பெற்றுள்ளேன். மற்றும் ஜப்பான்,  சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் போட்டிகளில் பங்கெடுத்துள்ளேன் பதக்கங்கள் கிடைக்கவில்லை.

இந்தியா, மலேசியா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் கராத்தே பயிற்சிமுகாம்களையும் நடாத்தியுள்ளேன். மலேசியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் உள்ள கராத்தே நிபுணர்களினால் நடாத்தப்பட்ட கராத்தே தேர்வுகளில் நேரடியாக தோற்றி 4ஆம், 5ஆம், 6ஆம் உயர்தர டான் டிப்ளோமா கறுப்புப்பட்டிகளை பெற்றுள்ளேன்.

5)   சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டிகளில் நீங்கள் நடுவராக கடமையாற்றிய அனுபவத்தை எம்முடன் பகிர்ந்து கொள்ள முடியுமா ? 

இலங்கையின் தேசிய கராத்தே நடுவர் தேர்வில் பங்கெடுத்து “ஏ” தர குமித்தே நடுவராகவும், “ஏ” தர காட்டா மத்தியஸ்தராகவும் சித்தியடைந்தமையும், இலங்கையில் நடைபெற்றுவரும் சுற்றுப்போட்டிகளில் கடமையாற்றி அனுபவங்களை பெற்றமையும் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற திறந்த சர்வதேச சுற்றுப்போட்டிகளில் நடுவராக கடமையாற்றுவதற்கு பெரும் உதவியாக அமைந்தது.

மேலும் தேர்ச்சிபெற்ற கராத்தே நடுவர்களுடன் இணைந்து பணியாற்றும்போது பல்வேறுபட்ட கள அனுபவங்களும் எனக்கு கிடைக்கப்பெற்றமையையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

ஒரு கராத்தே வீரனுக்கு இன்னொரு விளையாட்டு வீரனின் திறமையை வாழ்த்தும் மனப்பக்குவம் மிகவும் முக்கியம். தேவையற்ற காரணம் கூறி விமர்சிப்பது தனது தாழ்வு மனப்பான்மையை வெளிப்படுத்துவதாக அமையும்.

கடவுளின் ஆசீர்வாதம் எங்களுடைய இடைவிடா முயற்சி, தொடர்ச்சியான தேடல், எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பம் போன்றவற்றால் எமக்கு ஒரு வெற்றி . 

உயர் தரம் அல்லது உயர் தகுதி கிடைக்கும்போது ஒரு போதும் பெருமையடையாது தன்னடக்கத்துடன் செயற்படல் மேலும் எம்மை உயரிய நிலைக்கு கண்டிப்பாக இட்டுச்செல்லும் என்பதில் ஐயமில்லை. ஒரு கராத்தே மாணவன் தன்னுடைய பயிற்றுனர் சிரேஸ்ட அங்கத்தவரை மாத்திரம் அல்ல ஏனைய பயிற்றுனர்கள் சிரேஸ்ட மற்றும் சக அங்கத்தவர்களையும் மதித்து நடப்பது கனம் பண்ணுவது அவரது வளர்ச்சியையும், ஆளுமையும் மேன்மைப்படுத்தி சமூக அங்கீகாரத்தை வழங்கும்.

ஒரு கலைஞன் அல்லது விளையாட்டு வீரன் ஒரு போதும் பொறாமை கொள்ளக்கூடாது பிறரது வெற்றியை திறமையை ஏற்றுக்கொள்ள கட்டாயம் பழக வேண்டும். பொறாமை தன்னுடைய சுயவளர்ச்சியை கண்டிப்பாக அழித்துவிடும்.