(செ.தேன்மொழி)

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை உட்பட பல வழக்குகள்  தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொண்டு தமக்கு அறிக்கை சமர்பிக்குமாறு குறிப்பிட்டு சட்டமாதிபர் தம்புல்ல தி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு  கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இதன்போது சில வழக்குகள் தொடர்பில் உரிய விசாரணைகளை விரைவாக மேற்கொண்டு தமக்கு அறிக்கையிடுமாறு குறிப்பிட்டுள்ள சட்டமாதிபர் , விசாரணைகள் முழுமையடையாது அறிக்கைகளை அனுப்பினால் அதனை திருப்பி அனுப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமாதிபரினால் அனுப்பபட்ட கடிதத்தில் சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை , றகர் வீரர் வசீம் தாஜூதீன் கொலை சம்பவம்,  ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் விவகாரம், 11 இளைஞர்களை கடத்தல் மற்றும் மூதூரில் உதவிக்குழுவைச் சேர்ந்த 17 பேரை கொலை செய்த சம்பவம் ஆகிய விவகாரங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு  குறிப்பிடப்பட்டுள்ளது.