அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்டுள்ளவர்கள் குறித்த அமெரிக்காவின் புதிய பட்டியலில்  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பெயர் இடம்பெறாததை தொடர்ந்து அவர் தொடர்ந்தும் அமெரிக்க பிரஜையாக நீடிக்கின்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவை திணைக்களம் வெளியிடும் பிரஜாவுரிமையை கைவிட்டவர்கள் குறித்த காலாண்டு அறிக்கையிலேயே  கோத்பாய ராஜபக்சவின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாக வெளியாகவுள்ளது.

இலங்கையின் வர்த்தமானிக்கு ஒப்பான அமெரிக்க ஆவணத்தில் பிரஜாவுரிமையை கைவிட்டவர்கள் தொடர்பான விபரங்கள் காலாண்டிற்கு ஒரு முறை வெளியாவது வழமை எனினும் ஆவணத்தில் அவரது பெயர் இடம்பெறவில்லை

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கம் குறித்து உறுதி செய்யும் ஆவணம் மே 3ம் திகதி கிடைத்துள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இதேவேளை தனது இரட்டை பிரஜாவுரிமை குறித்து கோத்தபாயராஜபக்ச எதனையும் தெரிவிக்காத நிலையில் அவரிற்கு எவ்வாறு  புதிய இலங்கை கடவுச்சீட்டு வழங்கப்பட்டது என்ற சர்ச்சை எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.