மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கழிவுகளை முகாமைத்துவம் செய்ய நீதிமன்ற உத்தரவு மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர் மீது அநாகரிகமாக நடந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மன்னிப்பு கேட்கப்படவேண்டும் என அரசாங்க வைத்தியர்கள், சங்கம் தாதியர்கள், ஊழியர்கள் சங்கங்கள் ஒன்றிணைந்து கோரிக்கையொன்றை விடுத்து இன்று வியாழக்கிழமை (15.08.2019) பணிப்புறக்கனிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கழிவுகளை ஏற்றிய வாகனங்கள் வைத்தியசாலைக்கு முன்னால் நிறுத்தப்பட்டு இந்த பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவசரசிகிச்சை பிரிவு தவிர்ந்த ஏனைய பிரிவுகள் இயங்கவில்லை. வைத்தியசாலைக்கு நோய்க்கு மருந்து எடுக்க மற்றும் கிளினிக் பிரிவுகளில் மக்கள் நீண்ட நேர காத்திருப்பின் பின்னர் தமது நோய்க்கு மருந்து எடுக்கமுடியாமல் திரும்பிச் சென்றனர். 

இது தொடர்பாக வைத்தியசாலை அரசாங்க வைத்தியர் சங்கம், விசேட வைத்திய நிபுணர் சங்கம், தாதியர் மற்றும் ஊழியர் சங்கங்கள் ஒன்றினைந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது இவ்வாறு தெரிவித்தனர். 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கிழக்கு மாகாணத்துக்கும் உரிய ஒரு வைத்தியசாலை இதன் கழவு அகற்றல் நிலையில் ஒரு இறுக்கமான நிலையை சந்தித்திருக்கின்றோம்.

ஒரு நாளைக்கு 500 கிலோகிராம் எடையுள்ள கழிவுகள் வைத்தியசாலையில் உருவாகின்றது. அதனை திராய்மடு பிரதேசத்தில் இருக்கின்ற வைத்தியசாலை கழிவு முகாமைத்துவ நிலையத்தில் அதனை முகாமைத்துவம் செய்துவருகின்றோம் .

கடந்த காலங்களில் ஏற்பட்ட தடங்கல்கள் காரணமாக அங்கு அதனை முறையாக அங்கு முகாமைத்துவம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இப்பொழுது 70 ஆயிரம் எடையுடைய வைத்தியசாலை கழிவுகள் எங்கள் கைவசம் இருக்கின்றது. 

இது ஒரு பாரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகின்ற காரணத்தாலே இதனை அவசரகால அடிப்படையிலே இதனை முகாமைத்துவம் செய்வதற்காக வைத்தியசாலை தொற்று கிருமி அழிக்கின்ற குழுவிலே நிபுணத்துவம் பெற்றவர்களின் சிபார்சிலே உலக சுகாதார ஸ்தாபனத்தின் நியமனங்களின் அடிப்படையில் சுகாதார அமைச்சினுடன் மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளர் ஆகியோரின் உதவியோடு செங்கலடி வேப்பைவெட்டுவான் பகுதியில் காணி ஒன்று வழங்கப்பட்டது 

அந்த காணிக்குரிய அனைத்து பூர்வாங்கள் வேலைகளை மத்திய சுற்றாடல், கட்டடத் திணைக்களம், நிலஅளவைகள் திணைக்களம் உட்பட சம்மந்தப்பட்ட திணைக்களங்களில் உரிய முறையான அனுமதி பெறப்பட்டு புதைகுழி முறையில் முகாமைத்துவம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டு, இதனடிப்படையில் சகல தரப்பிற்கு அறிவிக்கப்பட்டு நேற்று புதன்கிழமை கழிவுகளை புதைப்பதற்கு 6 வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டது. இதன்போது அந்த பிரதேச மக்கள் சிலரை தவறாக வழிநடத்தி அவர்கள் அதனை அங்கு முகாமைத்துவம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் மக்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக வைத்தியசாலை பணிப்பாளர் உட்பட கொண்ட குழுவினர் அங்கு சென்றனர். இதன்போது வைத்தியசாலை பணிப்பாளர் மக்களுடன் உரையபடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் வைத்தியசாலை பணிப்பாளரை அவர் தனக்கு கீழே உள்ள ஒரு அடிமையை அழைப்பது போன்று அநாகரிகமாக நடந்து கொண்டு அங்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஒரு அதிகாரியுடன் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என இவருக்க தெரியாது. ஆனால் அந்த பொதுமக்கள் நாகரீகமாக நடந்து கொண்டனர். பாராளுமன்ற ஊறப்பினர் மக்களுக்கு நல்லுதாரணமாக இருக்கவேண்டும். ஆனால் இவர் அதிகார துஸ்பிரயோகம் செய்ததற்கு எமது பணிப்பாளரிடம் மன்னிப்பு கட்டாயம் கேட்க வேண்டும். 

அத்தோடு அங்கு கழிவு முகாமைத்துவம் செய்யக் கூடாது என சொன்னாரே. அவர் இந்த கழிவு முகாமைத்துவத்திற்கு தீர்வு தரப்படவேண்டும்.

இதேவேளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருக்கின்றோம். கழிவு முகாமைத்துவத்திற்கு நீதிமன்ற உத்தரவை நாடிநிற்கின்றோம். அதுவரை எமது பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என்றனர்.