மகாபாரதம் கதையை மையமாக வைத்து கன்னடத்தில் தயாரான குருஷேத்திரம் படத்தை தமிழில் எஸ்.தாணு வெளியிடுகிறார். 

இதில் கர்ணனாக அர்ஜுன், துரியோதனனாக தர்ஷன், திரெளபதியாக சினேகா நடித்துள்ளனர். நாகன்னா இயக்கி உள்ளார். முனிரத்னா தயாரித்துள்ளார்.

இத் திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் அர்ஜுன்,

குருஷேத்திரம் படத்துக்கு கன்னட ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு வாரத்தில் ரூ.30 கோடி (இந்திய ரூபா) வசூலித்துள்ளது. 

இந்த படம் தமிழிலும் அதே பெயரில் திரைக்கு வருவது மகிழ்ச்சி. இதில் நடித்துள்ள தர்ஷன், சினேகா உள்ளிட்ட அனைவருமே மேக்கப், உடற்பயிற்சி என்று கதாபாத்திரத்துக்கு மாற கஷ்டப்பட்டோம்.

தினமும் 8-க்கும் மேற்பட்ட கேமராக்கள் வைத்து படப்பிடிப்பை நடத்தினர். சிவாஜி கணேசன் மகா நடிகர். அவர் ஏற்கனவே கர்ணனாக நடித்துள்ள படத்தை பல தடவை பார்த்து இருக்கிறேன். அவரது நடிப்பும் எனக்கு கர்ணன் வேடத்தில் நடிக்க தூண்டுதலாக இருந்தது. கர்ணன் வேடத்தில் நடித்தது பெருமையாக உள்ளது. 

சினேகா கதாபாத்திரமும் அழகாக உருவாக்கப்பட்டு இருந்தது. சண்டை காட்சிகள் பிரமாண்டமாக வந்துள்ளன. இது நம் கலாசாரத்தை பிரதிபலிக்கும் படம். வளரும் தலைமுறையினர் பார்க்க வேண்டிய படம். மகாபாரத கதைகளை மையப்படுத்தி பல படங்கள் வந்துள்ளன. இந்த படத்தை புதுமையாக உருவாக்கி உள்ளோம். யுத்தகள காட்சிகளும் உள்ளன. அதிக பொருட்செலவில் 3டியில் உருவாகி உள்ளது என்றார்.