வடமாகாண பிரமாண அடிப்படை­யிலான மூலதன நன்கொடை வழங்கல் திட்டத்தின் கீழ் தென்மராட்சிப் பிரதேசத்­தைச் சேர்ந்த வறுமைக் கோட்டுக்குட்பட்ட 6 குடும்பங்களுக்கு ஒரு இலட்சத்து 92 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

மாகாண சபை உறுப்பினரும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலக பிரிவின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சி.அகிலதாஸ் இந்நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதற்கமைய கொடிகாமம், கச்சாய் தெற்கைச் சேர்ந்த சிவனேஸ்வரன் நிரோசா­வுக்கு மலசலகூடம் அமைப்பதற்கு 50 ஆயிரம் ரூபாவும் வரணி கரம்பைக் குறிச்சியைச் சேர்ந்த பொ.சதீஸ்வரனுக்கு சிறு தொழில் முயற்சிக்காக 25 ஆயிரம் ரூபாவும் மீசாலை அல்லாரை வடக்கைச் சேர்ந்த திருத்தணி கணேஸ்வரிக்கு சுயதொழில் முயற்சிக்காக தையல் மெஷின் கொள்வனவு செய்ய 27 ஆயிரம் ரூபாவும் வரணி கரம்பைக்குறிச்சி கிழக்கைச் சேர்ந்த புனர்வாழ்வு பெற்ற கால்கள் இரண்டையும் இழந்த சின்னட்டி பஞ்சலிங்கத்திற்கு சுயதொழில் செய்வதற்கு 35 ஆயிரம் ரூபாவும் சாவகச்சேரி மறவன்புலோ கிழக்கு வாசியான புனர்வாழ்வு பெற்ற ஒருகாலை இழந்த முன்னாள் போராளியான இராசநாயகம் சற்குணராசாவுக்கு சுய தொழில் ஊக்குவிப்புக்கென 35 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனைவிட வரணி நாவற்காடு கிராம அபிவிருத்திச் சங்கம் கணினியைப் பெற்றுக் கொள்வதற்கு 50 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.