காஷ்மீர் விவகாரம் ; நேருவையும் இந்திராவையும் பின்பற்றும் மோடியும் ஷாவும் 

Published By: Priyatharshan

15 Aug, 2019 | 11:46 AM
image

இராமச்சந்திர குஹா

காஷ்மீரின் நவீன வரலாற்றை பற்றி மூன்னு மறுதலிக்கமுடியாத உண்மைகள் இருக்கின்றன. முதலாவது, பாகிஸ்தான் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் காஷ்மீரைச் சாட்டாக பயன்படுத்தி இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் வன்முறையையும் பயங்கரவாதத்தையும் தொடர்ச்சியாக தூண்டிவிட்டுவருகிறது. இரண்டாவது, காஷ்மீர்மக்களை தாங்களே தலைமைதாங்கி வழிநடத்துவதாக நினைத்துக்கொள்கிறவர்கள் பள்ளத்தாக்கில் இருந்து பண்டிற்கள் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டமைக்காக கழிவிரக்கப்படுவதற்கான எந்த அறிகுறியையும் காண்பிக்கவில்லை.மூன்றாவதாக, ( என்னால் காணக்கூடியதாக இருந்த ஒரு சந்தர்ப்பத்தைத் தவிர ) இந்திய அரசாங்கங்கள்  அந்த மாநிலத்தில் தேர்தல்களில் தங்களுக்கு அனுகூலமான முறையில் முடிவுகள் அமையக்கூடியதாக அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேடுகளைச்செய்து ஊழலை ஊக்கப்படுத்துவதுடன் வேறு பல வழிகளிலும் பள்ளத்தாக்கில் ஜனநாயகத்துக்கு மாறான நடைமுறைகளை வளர்த்திருக்கின்றன. 

இந்த மூன்று விடயங்களும் முற்றிலும் உண்மையானவை.இருந்தாலும் காஷ்மீரிகளினதும் காஷ்மீரினதும் விதியைத் தீர்மானிப்பதற்கு முயற்சிப்பவர்கள் இந்த உண்மைகளில் சிலவற்றின் மீதே கவனத்தைச் செலுத்துகின்றார்களே தவிர, சகல உண்மைகளைப் பற்றியும் ஒருபோதும் அக்கறை காட்டுவதில்லை.உதாரணமாக பாகிஸ்தான் மூன்றாவது உண்மையில் கவனம் செலுத்துகின்ற அதேவேளை, முதலாவது, இரண்டாவது உண்மைகளை அமுக்கிவிடுகிறது. இந்தியாவின் தீவிர தேசியவாதிகள் இதற்கு மறுதலையாக நடந்துகொள்கிறார்கள். அதாவது முதலாவதையும் இரண்டாவதையும் முதன்மைப்படுத்தி மூன்றாவதன் மீது கவனத்தைச் செலுத்துவதில்லை. இதனால், இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவு வலுவிழக்கச்செய்யப்பட்ட அண்மைய அண்மைய நடவடிக்கையை ஆராய்ந்துபார்க்காமல் உடனே வரவேற்றவர்கள் தங்களது நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கு பாகிஸ்தானிால் தூண்டிவிடப்படுகின்ற பயங்கரவாதத்தையும் பண்டிற்கள் கொடுமைப்படுத்தப்பட்டமையையும் பயன்டுத்திக்கொள்கிறார்கள்.உண்மையிலேயே,  பிரிவு 370 ரத்துச்செய்யப்பட்ட முறை காஷ்மீரைப் பற்றிய மூன்றாவது உண்மையை உறுதிசெய்து பலப்படுத்துவதற்கு மாத்திரமே உதவுகிறது.அதனால், இரு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருப்பவை பள்ளத்தாக்கில் இந்திய அரசினால்  செய்யப்படுகின்ற அடாத்தானதும் எதேச்சாதிகாரத் தனமானதுமான நடவடிக்கைகளின் மிகவும் பிந்திய உதாரணங்கள் மாத்திரமேயாகும்.

பள்ளத்தாக்கில் முதலாவது பெரிய அரசியல் குற்றச்செயல் சரியாக 66 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்து.1953 ஆகஸ்டில் ஜம்மு -- காஷ்மீரின் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட முதலமைச்சர் ஷேய்க் அப்துல்லா பதவி கவிழ்க்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவருக்கு எதிராக எந்தவிதமான குற்றச்சாட்டுமே சுமத்தப்படாமல் நிலையில் ஐந்து வருடங்கள்  சிறையில் வாடினார்.1958 ஆம் ஆண்டில் குறுகிய காலம் விடுதலை செய்யப்பட்ட அப்துல்லா மீண்டும் ஒரு ஐந்து வருடங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டார்.இத்தடவை அவர் பாகிஸ்தானின் ஒரு கையாள் என்ற குற்றச்சாட்டு சமத்தப்பட்டது. இது நகைப்புக்கிடமானதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.ஏனென்றால், உண்மையில் அப்துல்லா இந்தியாவுக்கான ஆதரவுக்கும் சுதந்திர காஷ்மீர் ஆதரவுக்கும் இடையில் ஊசலாடிக்கொண்டிருந்தார்.அவர் ஒருபோதுமே பாகிஸ்தான் அரசுடன் ஒரு தொலைதூரப் பிணைப்பைக்கூட  கொண்டிருக்கவில்லை. ஏனென்றால், அவர் முஸ்லிம்களைப் போன்று இந்துக்களும் சீக்கியர்களும் அச்சொட்டாக சமமான உரிமைகளைக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பினார்.

இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேருவே காஷ்மீர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் சட்டவிரோதமாகவும் வெட்கக்கேடான முறையிலும் கைது செய்யப்படுவதற்கான அனுமதியை வழங்கியவர்.1964 ஏப்ரிலில் மிகவும் காலந்தாமதித்து மனம்மாறிய நேரு அப்துல்லாவை விடுதலை செய்தார். நேருவின் மரணத்துக்கு பிறகு துரதிர்ஷ்டவசமாக மீண்டும் அவர் லால்பகதூர் சாஸ்திரியினதும் பிறகு இந்திரா காந்தியினதும் உத்தரவின் பேரில் கைதுசெய்யப்பட்டு மேலும் 7 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டார். இறுதியாக, 1972 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்ட மிகவும் மனமுடைந்த மனிதராகவே வெளியே வந்தார் ; புதுடில்லி முன்வைக்கின்ற எந்த நிபந்தனையின் அடிப்படையிலும் உடன்பாடு ஒன்றுக்கு வருவதற்கு தயாராக இருந்தார். 

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தங்களது தலைவர் சிறையில் வாடிய அந்த வருடங்களில் ஜம்மு -- காஷ்மீர் மக்கள் மனதில் ஆழமான ஒரு தனிமை அல்லது அன்னியப்படுத்தப்பட்டுவிட்ட உணர்வு ஊடுருவியது. மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கங்கள் தேர்தல்களில் மோசடிகளைச் செய்து ஊழலை ஊக்குவித்த நிலையில், 1960 களிலும் 1970 களிலும் புதுடில்லியின் நோக்கங்கள் மீதான அவநம்பிக்கை மேலும் வளர்ந்தது.ஒரு குறுகிய நம்பிக்கை கீற்று பிரதமர் மொரார்ஜி தேசாயின்  ஜனதா கட்சி அரசாங்க காலத்தில் தென்பட்டது.காஷ்மீர் பள்ளத்தாக்கில் முதன்முதலான நேர்மையான தேர்தலை அந்த அரசாங்கம் 1978 ஆம் ஆண்டில் நடத்தியது.ஆனால், பிறகு 1980 ஆம் ஆண்டில் மீண்டும் அதிகாரத்துக்கு வந்த காங்கிரஸ் கட்சி திரும்பவும் புதிதாக ஏமாற்று வேலைகளை ஆரம்பித்தது. 1983 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜம்மு -- காஷ்மீர் அரசாங்கத்தை வஞ்சகத்தனமான வழிவகைகளின் ஊடாக பதவிகவிழ்த்தார்.நான்கு வருடங்கள் கழித்து அவரது மகன் ராஜீவ் காந்தி அப்பட்டமான முறையில் அந்த மாநிலத்தில் தேர்தல் மோசடிகளைச் செயதார். தேர்தல் நேர்மையாக நடத்தப்பட்டிருந்தால் அதில் வெற்றி பெற்றிருக்கக்கூடிய தலைவர்கள் விரக்தியில் எல்லையைக் கடந்துசென்று அங்கிருந்து 1989 ஆம் ஆண்டில் தங்களது  ஜிஹாத்தை தொடங்கினாரகள்.

1998 ஆம் ஆண்டில்   அடல் பிஹாரி வாய்பாய் பிரதமராக வந்தபோது காஷ்மீரில் வளர்ந்திருந்த அன்னியமய உணர்வையும்  அவநம்பிக்கையையும் கொண்ட  நீண்ட வரலாற்றைக் கையாளவேண்டியிருந்தது. மாநிலத்தில் நேர்மையானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதன் மூலமாக பிரச்சினையை கையாள அவர் நாட்டம் காட்டினார்.அத்துடன் பிளவுபட்டுக்கிடந்த காஷ்மீரின் இரு பாகங்களுக்கும் இடையில் பஸ் போக்குவரத்தை ஏற்படுத்துவது குறித்தும் பள்ளத்தாக்கின் மக்களுக்கு நேசக்கரத்தை நீட்டுவது குறித்தும்  யோசனைகளை  அவர் முன்வைத்தார். தனது அரசாங்கத்தின் கொள்கையின் மூன்று தூண்களாக வாஜ்பாய் மனிதாபிமானம், ஜனநாயகம் மற்றும் தாராளமனப்பான்மை ஆகியவற்றை முன்வைத்தார்.அவரது அணுகுமுறை மக்களைப் பிளவுபடுத்துவதற்கு ஊழலையும் குழுக்களுக்கிடையிலான பூசல்களையும் மக்களை அடக்கியொடுக்குவதற்கு அரச அதிகாரத்தையும் பயன்படுத்திய  முன்னைய காங்கிரஸ் அரசாங்கங்களின் அணுகுமுறையை விடவும் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. 

காஷ்மீரில் அரச அதிகாரத்தை கொடூரமான முறையில் பயன்படுத்துவதில் நரேந்திர மோடியும் அமித் ஷாவும் ஜவஹர்லால் நேருவினதும்  இந்திரா காந்தியினதும் பாதையையே பின்பற்றியிருக்கிறார்கள்.காஷ்மீர் மக்களின் நலன்களுக்காகவே பரிவு 370 வலுவிழக்கச்.செய்யப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.ஆனால், அந்த தீர்மானத்தை எடுப்பதில் அந்த மக்களுக்கு எந்தவிதமான பங்கும் வழங்கப்படவில்லை. அந்த பள்ளத்தாக்கை இந்தியா அதன் வரலாற்றில் கண்ட மிகப்பெரிய சிறையாக அரசாங்கம் மாற்றியிருந்தது ; தொலைத்தொடர்பு வசதிகள் சகலதும் துண்டிக்கப்பட்டு சுமார் 80 இலட்சம் மக்கள் வெளியுலகிடமிருந்து பிரிக்கப்பட்டார்கள் ; உணவு மற்றும் மருந்துப்பொருட்களை பெறுவதற்கான வசதிகளும் கட்டுப்படுத்தப்பட்டன.முன்னாள் முதலமைச்சர்கள் தடுத்துவைக்கப்பட்டார்கள். ( இது 1953 ஆகஸ்டை எதிரொலித்தது).ஏற்கெனவே இராணுவமயப்படுத்தப்பட்டிருந்த வலயத்துக்கு மேலும் ஆயிரக்கணக்கில் துருப்புக்கள் அனுப்பப்பட்டு அது ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியம் போன்று காட்சிதருகிறது.எமது காஷ்மீர் சகோதர பிரஜைகள் குரலெழுப்புவதற்கான சகல மார்க்கங்களும் அடைக்கப்பட்ட நிலையில், அவர்களது வாழ்வை முற்றாக மாற்றுகின்ற ஒரு சட்டமூலத்தை பாராளுமன்றம் அவசரஅவசரமாக நிறைவேற்றியது.

காஷ்மீரில் நடந்தேறியிருப்பவை இந்திய ஜனநாயகத்துக்கு வரவிருக்கும் கெடுதியை முன்னுணர்த்துகின்றன. சட்டங்கள் அவற்றின்  பயன்பாட்டுக் காலத்தையும் கடந்து நடைமுறையில் இருக்கின்றன ; அவற்றை  மாற்றியமைக்க வேண்டியிருக்கலாம் அல்லது நிலைமைகளுக்கேற்ப சீர்ப்படுத்தவேண்டியிருக்கலாம்.ஆனால், அந்த மாற்றங்களினால் பாதிக்கப்படுகின்ற மக்கள் மதிக்கப்படவேண்டும் ; அவர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கவேண்டும் ; அவர்களது கருத்துக்கள் கேட்டறியப்படவேண்டும் ; கண்ணை மூடிக்கொண்டு புள்ளிக்கோட்டில் கையெழுத்திடுவதற்கு முன்னதாக ஜனாதிபதியாவது சிறிது சிந்தித்துப்பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.இந்த சட்டத்தின் தாக்கத்துக்குள்ளாகப்போகின்ற இலட்சக்கணக்கான மக்கள் முன்கூட்டியே மௌனிக்கச் செய்யப்பட்டார்கள் என்பதை அவர் தெரிந்திருந்தார். அந்த உத்தரவை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக காஷ்மீரில் காஷ்மீரிகளுடன் பரந்தளவிலான கலந்தாலோசனையை நடத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டு ஜனாதிபதியினால் திருப்பியனுப்பியிருக்க முடியாதா?

காஷ்மீரில் நடந்திருப்பவை  குறித்து மகிழ்ச்சியடைகிறவர்கள்  அவை வகுத்திருக்கும் அச்சந்தரும் முன்னுதாரணத்தைப் பற்றி சற்று சிந்தித்து பார்க்கவேண்டும். காஷ்மீர் மக்களின் வாயை அடைப்பதற்கும் அவர்களை வெளியுலகிடமிருந்து துண்டிப்பதற்கும் அவர்களை இயங்காமல் செய்வதற்கும் அரச அதிகாரம் இந்த வகையாகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பது உங்களது மாவட்டத்துக்கு, உங்களது மாநிலத்துக்கு, உங்களது தலைவர்களுக்கு, உங்களது பிள்ளைகளுக்கு நாளை  நடக்கக்கலாம்.தற்போது இந்தியாவில் பதவியில் இருக்கும் அரசாங்கம் குறித்து இந்தியாவில் மிகவும் ஆழமாகச் சிந்திக்கின்ற அறிவுஜீவிகளில் ஒருவர் என்று வர்ணிக்கப்படுகின்ற வரும் அசோகா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான  பிரதாப் பானு மேத்தா அண்மையில் எழுதிய கருத்தை நான் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்கிறேன் ; " இது ஜனநாயகத்தையும் கலந்துரையாடலையும் நகைப்புக்கிடமாக்குகின்ற ஒரு அரசு. இது பீதியையே உளவியல் கோட்பாடாகக் கொண்டிருக்கின்ற அரசு. இது தனது பிறழ்வான தேசியவாத பாசாங்குகளுக்கு சாதாரண பிரஜைகளை இரையாக்குகின்ற ஒரு அரசு ". எமக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

   (இந்துஸ்தான் ரைம்ஸ்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22