மேத் எஸ்பினாஸ் பாலத்தின் தடுப்பு கம்பியின் மீது ஏறி முத்தமிட்டபோது பாலத்தில் இருந்து தவறி விழுந்து காதல் ஜோடி உயிரிழந்துள்ளனர். 

தென் அமெரிக்கா - பெரு நாட்டை சேர்ந்த காதல் ஜோடி ஹெக்டோர் விடால் (வயது 36) மற்றும் மேத் எஸ்பினாஸ் (34). மலையேற்றத்தில் ஆர்வம் கொண்ட இருவரும் கஸ்கோ நகரில் பெத்தலேம் என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

 

அப்போது மேத் எஸ்பினாஸ் பாலத்தின் பக்கவாட்டில் உள்ள தடுப்பு கம்பியின் மீது ஏறி அமர்ந்தார். தரையில் நின்ற தனது காதலன் ஹெக்டோர் விடாலின் இடுப்பில் கால்களை பின்னியபடி அவருடன் பேசி கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் இருவரும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுத்து அன்பு பரிமாறினர். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக காதலர்கள் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

சுமார் 50 அடி உயரத்தில் இருந்து விழுந்ததில் மேத் எஸ்பினாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹெக்டோர் விடால் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

காதல் ஜோடி முத்தமிடுவது மற்றும் பாலத்தில் இருந்து தவறி விழும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.