ஆண்கள் பெண்கள் என இருபாலார்களும், இன்றைய திகதியில் பாடசாலையிலிருந்து பல்கலை கழகங்கள் வரையிலும் கணினி முன் அமர்ந்து பாடங்களைக் கற்கிறார்கள். அதே போல் அலுவலகத்திலும், வீட்டிலும் கணினி முன் அமர்ந்து பணியாற்றுகிறார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு தொற்றா நோய்கள் ஏற்படுவதுடன் Carpal Tunnel Syndrome என்ற பாதிப்பும் ஏற்படுவது அதிகரிக்கிறது.

Carpal Tunnel Syndrome என்றால் நமது உள்ளங்கைக்கு கீழிருக்கும் மணிக்கட்டுப் பகுதியிலும், வலது கை மற்றும் இடது கையிலுள்ள ஐந்து விரல்கள் முடியும் பகுதியில் உள்ள நரம்புகளில் அழுத்தம் ஏற்படுவதால், அங்குள்ள நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக கட்டைவிரல், ஆள்காட்டிவிரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்று விரல்களிலும் வலி உருவாகிறது. 

வலியுடன் இந்த மூன்று விரல்களிலும் மரத்துப் போகும் தன்மையும் ஏற்படுகிறது. இதனை உடனடியாக கண்டறிந்து உரிய சிகிச்சையைப் பெறவில்லை என்றால் இந்த மூன்று விரல்களில் ஏற்படும் வலியானது முழங்கை வரைக்கும் பரவி வலியை உண்டாக்குகிறது. சிலருக்கு மூன்று விரல்களைப் பயன்படுத்தி ஒரு காகிதத்தைக் கூட தூக்க இயலாத அளவிற்கு பாதிப்பு அதிகமாகிவிடும். 

மேலும் சிலரால் இத்தகைய பாதிப்பிற்கு பின்னர் கைகளில் கைபேசியை வைத்துக்கொண்டு பேசுவதற்கும் அசௌகரியமான சூழல் உருவாகும். அதனால் இத்தகைய பாதிப்பு தொடக்க நிலையில் இருக்கும்பொழுது இதற்கு மருத்துவ ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டும்.

கணினி முன் அமர்ந்து மவுஸ் எனப்படும் வன் பொருளை தொடர்ந்து ஒரே நிலையில் பயன்படுத்துவதால் தான் அப்பகுதியிலுள்ள நரம்புகளில் இரத்தவோட்டம் தடைப்பட்டு, அங்கு வலியும் மரத்து போகும் தன்மையும் ஏற்படுகிறது. ஆண்களைக் காட்டிலும் 25 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இத்தகைய பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது.

மது அருந்துதல் மற்றும் புகைப்பிடிப்பவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு வரலாம். ஹைப்போ தைராய்டிசம் என்ற பாதிப்பு உள்ளவர்களுக்கும், ருமாடிக் ஒர்த்ரிடிஸ் என்ற பாதிப்பு உள்ளவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு வரலாம்.

இதற்கு மருத்துவர்கள் மூன்று அல்லது நான்கு நாட்கள் கட்டாய ஓய்வு பெறவேண்டும்என்றும் வலியுறுத்துகிறார்கள். கணினி முன் அமர்ந்து பணியாற்றும் பொழுது ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு முறை எழுந்து, இயன்முறை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சிறிய பயிற்சிகளை செய்தால் இத்தகைய பாதிப்பிலிருந்து உடனடியக நிவாரணம் பெறலாம். 

கணினியில் பணியாற்றும் பொழுது உங்களது மணிக்கட்டுக்கு கீழே குஷன் போன்ற மென்மையான ஒரு பொருளை வைத்துக் கொண்டு, அதன் மீது உங்களின் மணிக்கட்டுப்பகுதி அழுத்தம் பெறுமாறு மவுஸில் பணியாற்ற வேண்டும். இயன்முறை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பயிற்சிகளை உறுதியாக பின்பற்ற வேண்டும். இதனை தொடர்ந்தால் ஆறு மாத காலத்தில் இத்தகைய பாதிப்பு மறையும்.

டொக்டர் செந்தில்குமார்.

தொகுப்பு அனுஷா.