இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் நிறைவில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை குவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 டெஸ்ட், 3 இருபதுக்கு - 20 சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இன்றைய தினம் காலியில் ஆரம்பமான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

அதன்படி நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடிவர 66.2 ஓவர் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 198 ஓட்டங்களை குவித்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. ரோஸ் டெய்லர் 82 ஓட்டத்துடனும், மிட்செல் செண்டனர் 7 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பின்னர் மழை முடிந்தவுடன் 198 ஓட்டத்துடன் ஆட்டத்தை தொடர்ந்த நியூஸிலாந்து அணி இன்றைய முதலாம் நாள் ஆட்ட முடிவின்போது 68 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 203 ஓட்டங்களை பெற்றிருந்தது.

நியூஸிலாந்து அணி சார்பில் ஜீட் ரவல் 33 ஓட்டத்துடனும், டோம் லெதம் 30 ஓட்டத்துடனும், கேன் வில்லியம்சன் எதுவித ஓட்டமின்றியும், ஹென்றி நிக்கோலஷ் 42 ஓட்டத்துடனும், வெல்டிங் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க ரோஸ் டெய்லர் 86 ஓட்டத்துடனும், மிட்செல் செண்டனர் 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட அகில தனஞ்சய 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். நாளை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டாகும்.

photo credit : icc