இலங்கையில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் பணியகம் பாகிஸ்தானின் 73வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு வர்ணமயமான கொடியேற்ற வைபவத்தினை உயர் ஸ்தானிகர் பணியகத்தில் நடத்தியது.

பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கலாநிதி ~ஹித் அஹ்மத் ஹமத் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். இந்நிகழ்விற்கு இலங்கை வாழ் பாகிஸ்தானிய பிரஜைகள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.  இதன்பொழுது, பாகிஸ்தானிய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சுதந்திர தின செய்திகள் வாசிக்கப்பட்டன.

இந்நிகழ்விற்கு உரையாற்றுகையில் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.

 “ மகத்தான தியாகங்களுடன் உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் அமைதியினை விரும்பும் நாடாகும். பாகிஸ்தான் விசேடமாக தெற்காசியாவிலே அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு எப்பொழுதும் ஆதரவளிக்கின்றது. பாகிஸ்தானிய அரசு இச்சுதந்திர தினத்தினை காஸ்மீரிற்கான ஒருமைப்பாட்டு தினமாக அவதானிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

 ஏழு தசாப்பதங்கள் பழைமையான இப்பிரச்சினைக்கு அமைதியான முறையிலும் ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களுக்கேற்பவும் தீர்வினை மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் எப்பொழுதும் வலியுறுத்துகின்றது.”

இலங்கை மற்றும் பாகிஸ்தான் இருதரப்பு உறவுகள் தொடர்பாக உயர் ஸ்தானிகர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார். 

பாகிஸ்தான் இலங்கையுடனான பரஸ்பர கௌரவம், புரிந்துணர்வு மற்றும் நெருங்கிய ஒத்துழைப்பின் அடிப்படையில் அமைந்த இருதரப்பு உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றது. 

பாகிஸ்தான் அனைத்து உலக அரங்கிலும் இலங்கைக்கான நிபந்தனையற்ற ஆதரவினை விசேடமாக தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஆதரவினை தொடர்ந்தும் வழங்கும் என உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.