(எம்.மனோசித்ரா)

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபய ராஜபக்ஷ நாடளாவிய ரீதியிலுள்ள மதஸ்தலங்களுக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். 

அதற்கமைய இன்றைய தினம் கண்டிக்கு விஜயம் செய்த அவர் கடுகெல தெல்வ விநாயகர் ஆயலத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும் இந்த வழிபாடுகளில் கலந்து கொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து மீரா மக்கம் முஸ்லிம் பள்ளிவாயலுக்கும் சென்றிருந்தார். 

அங்கு மத வழிபாடுகளை நிறைவு செய்ததன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ, கோதாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் மல்வத்து மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசி பெற்றனர். 

அதனைத் தொடர்ந்து அஸ்கிரிய பீடத்திற்குச் சென்ற அவர்கள் மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்த தேரரிரடமும் ஆசி பெற்றுக் கொண்டனர். 

மத வழிபாடுகளைத் தொடர்ந்து தலதா மாளிகை வளாகத்தில் கூடியிருந்த இளைஞர் யுவதிகளிடம் அவர்களின் வேலை வாய்ப்புக்கள் குறித்து கலந்துரையாடிய கோதாபய, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்த கொண்டார்.

இதேவேளை  கதிர்காமத்திற்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.