முன்னணி நகைச்சுவை நடிகராகவும் கதையின் நாயகனாகவும் வலம் வரும் யோகி பாபு நடிக்கும் புதிய படத்திற்கு ‘பப்பி’ என பெயரிடப்பட்டு, அதன்  ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

தர்மபிரபு, கூர்க்கா ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படம் ‘பப்பி’ இதனை அறிமுக இயக்குனர் நட்டு தேவ் இயக்கியிருக்கிறார். இவர் ‘காக்கா முட்டை ’புகழ் இயக்குநர் மணிகண்டனின் உதவியாளர். இந்த படத்தில் யோகிபாபுவுடன் நடிகர் வருண், கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தீபக் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு தரண் குமார் இசையமைத்திருக்கிறார்.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் டொக்டர் ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் ‘பப்பி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் ஆர் ஜே பாலாஜி, தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். வெளியான சிறிது நேரத்திலேயே சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது.

இந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் நடிகர் வருண், ஏற்கனவே நைட் ஷோ, வனமகன், போகன், நெருப்புடா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் என்பதும், இந்த படத்தின் மூலம் கதையின் நாயகனாக உயர்ந்திருக்கிறார் என்பதும், இப்படத்தின் நாயகியான கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே, தமிழில் நடிக்க ஒப்பந்தமான முதல் படம் பப்பி என்பதும், ஆனால் இவர் ஜெயம் ரவியுடன் நடித்த ‘கோமாளி ’படம் முதலில் வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஃபர்ஸ்ட் லுக்கில் முரட்டு சிங்கிள் இயக்கம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதும், யோகி பாபு மற்றும் வருணுடன் ஒரு நாய் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறது என்பதால் இதனை குழந்தைகள் கூட ரசிக்கிறார்கள் என்கிறார்கள் திரையுலகினர்.