(செ.தேன்மொழி)

தொடங்கொட பகுதியில் பூட்டப்பட்டிருந்த வீட்டிலிருந்து 3 கோடி ரூபாய் பெறுமதியான சட்டவிரோத மதுபானம் மீட்கப்பட்டுள்ளது.

தொடங்கொட - இம்புட்டுகஹாலந்த பகுதியில் வீடொன்றில் நேற்று புதன்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் தொடங்கொட பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த மதுபான தொகை கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன் போது 15 பீப்பாய்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த 3ஆயிரத்து 750 லீட்டர் தொகை மதுபான ஸ்பிரித்து மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது சம்பவ இடத்தில் சந்தேகத்திற்கிடமான நிலையில் ஒருவரும் இருக்கவில்லை என்பதுடன் குறித்த வீடும் பூட்டப்பட்டு இருந்துள்ளது.

இந்நிலையில் சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ள தொடங்கொட பொலிஸார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்தது.