இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. 

குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டதை தொடர்ந்து, இரண்டாவது போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப் பெற்றது. 

தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ள இந்திய அணி, இன்று போட்டியில் வெற்றி பெற்று இருபதுக்கு - 20 தொடரை போலவே ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்குகிறது. 

உலகக் கிண்ண தொடரை போலவே இந்த தொடரிலும் இந்திய அணியின் பந்து மிக சிறப்பாக உள்ளது. ஆனால் துடுப்பாட்டத்தில் சில வீரர்கள் இன்னும் சொதப்பி வருகின்றனர். 

குறிப்பாக ஷிகர் தவான் மற்றும் ரிஷப் பண்ட் தொடர்ந்து தடுமாறி வருகின்றனர். இந்திய அணியின் மத்தியதர வீரர்கள் கவலைக்குரிய நிலையில் இருந்ததைத் தொடர்ந்து, கடந்த போட்டியில் ஸரேயாஸ் ஐயர் 68 பந்துகளில் 71 ஓட்டங்கள்அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

அவரின் பங்களிப்பு இந்திய அணிக்கு இன்றைய போட்டியில் மிகவும் முக்கியமானது.

மறுமுனையில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு ஆரம்பத்தில் இருந்து இந்த தொடர் ஏமாற்றத்தையே அளித்து வருகிறது. துடுப்பாடத்திலும் சரி பந்து வீச்சிலும் சரி அனைத்திலும் அந்த அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது. 

இந்த தொடரில் தொடர்ந்து போட்டியின் போது மழை குறுக்கிட்டு வருகிறது. இன்றைய போட்டியிலும் இலகுவான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அந் நாட்டு வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.