(நா.தனுஜா)

ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சட்டத்திற்கு முரணான நகர்வு, குறித்த பிரதேசத்தில் காணப்படும் பதற்றநிலையை மேலும் அதிகரிக்கும் என்பதுடன், பிராந்தயத்தின் சமாதானம் மற்றும் பாதுகாப்பு ஆகிய விடயங்களிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் எடுத்துரைத்திருக்கிறார்.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஷஹீட் அஹமட் ஹஷ்மட் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தின் தற்போதைய நிலை தொடர்பில் விளக்கிய போதே இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்டு அது இரு யூனியன் பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர் இவ்விவகாரம் தொடர்பில் அரசியல் ரீதியான கருத்தினை வெளியிட்ட இலங்கையின் முதலாவது அரசியல் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நோக்கப்பட்டார். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வை வழங்கும் போது காஷ்மீர் விவகாரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.