(எம்.மனோசித்ரா)

இலங்கை போக்குவரத்து சேவையில் சொகுசு பஸ்களை சேவையில் இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் நிதி அமைச்சின் அதிகாரிகள், தனியார் துறைக்கு இவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு உதவுகின்றனர் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க விசனம் தெரிவித்துள்ளார். 

தொடர்ச்சியாக இவ்வாறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தால் நாம் தொடர்ந்தும் அரசியலில் இருப்பதா என்பது குறித்து சிந்திக்க வேண்டும். இதுவரைக் காலமும் தரமான பஸ்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவில்லை. பஸ்போன்ற தோற்றமுடைய லொறிகளே சேவையில் ஈடுபடுகின்றன. 

அரச அதிகாரிகளுக்கு குளிரூட்டப்பட்ட வாகனங்கள் இருப்பதால் மக்களின் சிரமம் குறித்து அவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. இவர்களுக்கான அரச வாகனங்களை நிறுத்திவிட்டு பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தச் செய்ய வேண்டும். அண்மையில் 9 சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதைப் போன்ற பொதுப் போக்குவரத்து சேவையையே மக்களும் எதிர்பார்க்கின்றனர். 

பொதுப் போக்குவரத்து சேவை விஸ்தரிக்கப்பட்டால் தனியார் வாகனப் பயன்பாட்டுக்கான தேவை இருக்காது. இது குறித்தும் அரச அதிகாரிகள் சிலரின் முறையற்ற செயற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சேவைக்கு அல்லாமல் தனியார் பஸ் சேவைக்கு பஸ்களை இறக்குமதி செய்வதற்கு நான் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்றார். 

தொம்பே பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.