(நா.தனுஜா)

மாகாணசபைத் தேர்தல்களையும், ஜனாதிபதித் தேர்தலையும் ஒன்றுக்கொன்று அண்மித்த திகதிகளிலேயே நடத்த வேண்டும். அவ்வாறில்லாத பட்சத்தில் ஒரு தேர்தலின் முடிவு மற்றைய தேர்தலின் முடிவில் தாக்கம் செலுத்தும் நிலையேற்படும் என்று பெப்ரல் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

எமது நாட்டைப் பொறுத்தவரை தேர்தல் செலவீனங்களை வரையறுக்கும் சட்டங்கள் எவையும் இயற்றப்படாமை நியாயமான தேர்தல் நடைமுறையைப் பாதிக்கின்றது. 

எனவே தேர்தல்களின் போது மேற்கொள்ளப்படும் செலவுகள் தொடர்பில் வரையறைகளை ஏற்படுத்துவதற்குரிய சட்டமூலம் ஒன்றினைத் தயாரித்திருக்கின்றோம். இதனை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னரேனும் நிறைவேற்றிக்கொள்வதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்ச்சியாகக் காலந்தாழ்த்தப்பட்டுவரல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்காலம் நெருங்கியுள்ள நிலையில் சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டு செயற்படும் பெப்ரல் அமைப்பு இன்று புதன்கிழமை மருதானையிலுள்ள சமூக, சமய நடுநிலையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. 

அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி மேற்கண்டவாறு கூறினார்.