(நா.தினுஷா)

எதிரிணி ஜனாதிபதி வேட்பாளரை அடிப்படையாக கொண்டு ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரை தீர்மானிக்காது. மாறாக நிலையான கொள்கை மற்றும் அபிவிருத்தி போன்ற விடயங்களை மையப்படுத்தியே எமது தெரிவு அமையும் என கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரவித்தார். 

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்றைய தினம் அலரிமாளிகையில் இடம்பெற்றது.  இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதலளித்த போதே அமைச்சர்  சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டார்.  

கேள்வி : பாராளுமன்ற  உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளாரே ? 

பதில் : எமது நாட்டில் சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்கவும் நிலைப்பாடுகளை  வெளிப்படுத்துவதற்குமான சுதந்திரம் உள்ளது. ஜனநாயக முறைமையில்  தனக்கு நம்பிக்கையான நிலைப்பாட்டில் இருப்பதற்கான உரிமையும் சகலருக்கும் உள்ளது. 

கேள்வி : எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பாலானவர்கள் உங்களை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும்  என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள். இவ்வாறானவொரு நிலைமையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஏன் உங்களை வேட்பாளராக களமிறக்க ஆதரவு வழங்க மறுத்து வருகிறார்கள்? 

பதில் : உண்மை என்றாவது வெல்லும். 

கேள்வி : ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை கட்சி அடையாளம் காண்டுள்ளதா? 

பதில் : அது தொடர்பான சகல விடயங்களும்  எதிர்காலத்தில் வெளியாகும். 

கேள்வி : உங்களை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு இடமளிக்கா விட்டால் தனித்து செயற்படுவோம் என்றே நிலைப்பாட்டிலேயே கட்சியில்  அனேகமான உறுப்பினர்கள் இருக்கிறார்கள் ? 

பதில் : நான் எதனையும் எதிர்மறையாக சிந்தித்து செயற்பட விரும்புவதில்லை. நேர்மையானமுறையில் செயற்பட்டு எதிர்காலத்தை நோக்கி  பயணிப்பதே எனது எதிர்பார்ப்பாகும்.  நேர்மறையான சிந்தனைகளை  முறையாக  கடைப்பிடிகப்பவனாக இருந்து வருகிறேன் என்றார்.