இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இன்றைய தினம் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு எதிராக விளையாடுகின்றது.

இன்றைய போட்டி காலியில் இடம்பெறுகின்றது. இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 டெஸ்ட், 3 இருபதுக்கு - 20 சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டியானது இன்று 14 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகியுள்ளது.

இந் நிலையிலேயே இப் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 15 பேர் கொண்ட அணிக் குழாமை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் அனுமதியுடன் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

திமுத் கருணாரத்ன தலைமையிலான இந்தக் குழாமில் அஞ்சலோ மெத்தியூஸ், லஹிரு திரிமான்ன, தினேஷ் சண்டிமல், குசல் மெண்டீஸ், குசல் பெரேரா, நிரோஷன் திக்வெல்ல, தனஞ்சய டிசில்வா, அகில தனஞ்சய, லசித் எம்புலுதெனிய, சுரங்க லக்மால், லஹிரு குமார, ஒசத பெர்னாண்டோ, லக்ஷான் சந்தகன் மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இன்றைய போட்டியில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தினேஷ் சண்டிமல் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவர் இன்று களமிறங்கவில்லை. 

இன்றைய போட்டியில்,திமுத் கருணாரத்தன தலைமையிர், அஞ்சலோ மெத்தியூஸ், லகிரு திரிமன்னே, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, தனஞ்சய டி சில்வா, அகில தனஞ்சய, லசித் எம்புலுதெனிய, சுரங்க லக்மால், லகிரு குமார ஆகியோர் விளையாடுகின்றனர்.

துடுப்பெடுத்தாடக் களமிறங்கியுள்ள நியூசிலாந்து அணி 5 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 7 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.