ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் உதயமாகவுள்ள புதிய அரசியல் கூட்டணியான ஜனநாயக தேசிய முன்னணி குறித்து எதிர்வரும் 17 ஆம் திகதி சனிக்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படுமென என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்றிரவு (13) அலரிமாளிகையில் நடைபெற்றது.

இதன்போது உதயமாகவுள்ள புதிய கூட்டணி குறித்த விவகாரத்தை கையாள்வதற்கு உப குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே நேற்றிரவு இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தையடுத்த கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மனோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றிரவு நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அமைக்கப்பட்ட உபகுழு எதிர்வரும் 17 ஆம் திகதி சனிக்கிழமை கூடுகின்றது.

குறித்த உபகுழு கூட்டத்தில் ஜனநாயக தேசிய முன்னணி என்ற கூட்டணி தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும். அத்துடன், கூட்டணியை நாட்டு மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் திகதியும் அன்றைய தினம் தீர்மானிக்கப்படும்.

இந்நிலையில் தீர்மானம் எடுக்கப்படும் தினத்தன்று, கூட்டணி ஆவணத்தில் பங்காளிக் கட்சி தலைவர்கள்  கையெழுத்திடுவதும்,  கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் பெயர் அறிவிப்பும் ஒருசேர நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.