இன்றைய திகதியில் வாழ்க்கை நடைமுறை மாற்றத்தால் எம்முடைய உணவு பழக்கவழக்கங்களில் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். உடற்பயிற்சியின்மை, உணவுக்கட்டுபாடின்மை, சத்துள்ள உணவை எடுத்துக் கொள்ளாமை, சூரிய ஒளியை உட்கிரக்காமை என பல்வேறு காரணங்களால் எந்த வயதிலும், ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் பக்கவாதம் என்ற பாதிப்பிற்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.  

இந்நிலையில் பக்கவாதம் ஏற்பட்டவுடன் எவ்வளவு விரைவில் தரமான மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோமோ அவ்வளவு எளிதில் அதிலிருந்து குணமடையலாம் என்று நம்பிக்கையூட்டுகிறார்கள் மருத்துவ நிபுணர்கள். 

பக்கவாதங்களில் பலவகை உண்டு. அதில் ஒன்று Mechanical Thrombectomy அல்லது Accute Ischemic Stroke எனப்படும் பக்கவாதம். இத்தகைய பாதிப்பு ஏற்படும் பொழுது மூளையில் திடீரென்று இரத்தம் உறைந்து கட்டியாகி, அதன் காரணமாக வலது அல்லது இடது கை, வலது அல்லது இடது காலுக்குச் செல்லும் நரம்புகளில் அதன் செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி, பக்கவாதத்தை உண்டாகும். 

இவர்கள் பாதிப்பு ஏற்பட்ட அந்த நொடியிலேயே பேச்சு குழறத் தொடங்கும். இதனை அருகில் இருப்பவர்கள் உடனடியாக உணர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.ஏனெனில் அழைத்து செல்வதற்கு 20 நிமிடம் ஆகிறது என்றால், அவர்கள் 19 இலட்சம் மீண்டும் உற்பத்தி ஆகாத மூளையில் இருக்கும் செல்கள் இறந்து விடும். அதனால் விரைவாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

இத்தகைய நோயாளிகளுக்கு மருத்துவர்கள் முதலில்  Clot Busting Therapy எனப்படும் இரத்தம் உறைதலை உடைப்பதற்கான சிகிச்சையை மேற் கொள்வார்கள். இத்தகைய சிகிச்சையின்போது இரத்தம் எங்கு கட்டியாக இருக்கிறது என்பது துல்லியமாக தெரியவரும். அதன்பிறகு எண்டோவாஸ்குலர் சர்ஜேரி எனப்படும் சத்திர சிகிச்சையின் மூலம் அந்த இரத்தம் உறைந்து கட்டியாக இருக்கும் பகுதியை அகற்றுவார்கள். 

அதன்பிறகு தொடர் கண்காணிப்பில் நோயாளியை வைத்திருந்து மீண்டும் இயல்பு நிலைக்கு அவர்களை மீட்டெடுப்பார்கள். இத்தகைய சிகிச்சை நோயாளிக்கு பாதிப்பு ஏற்பட்ட ஒரு மணி தியாலத்தில் கிடைக்கப் பெற்றால்.. அவர்கள் பத்து தினங்களுக்குள் மீண்டும் பழைய நிலையில் நடக்கவும், பேசவும் இயலும். தொடர் பயிற்சி மூலம் அவர்கள் மீண்டும் தங்களின் இயல்பான வாழ்வை தொடரவும் முடியும்.

டொக்டர் மீனாட்சி சுந்தரம்.

தொகுப்பு அனுஷா.