இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் இந்திய கிரிக்கெட் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. 

இதற்காக முன்னாள் இந்திய அணித் தலைவர் கபில்தேவ் தலைமையில் சாந்தா ரங்கசாமி, அன்ஷிமன் கெய்க்வாட் உள்ளிட்ட ஒரு தேர்வுக் குழு அமைக்கப்பட்டு இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நடைபெற்று முடிந்த உலக கிண்ணத்துடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, துடுப்பாட்ட பயிற்சியாளர் கோச் சஞ்சய் பாங்கர், களத்தடுப்பு பயிற்சியாளர் கோச் ஸ்ரீதார், பந்து வீச்சுப் பயிற்சியாளர் கோச் பரத் அருண் ஆகியோரது பதவிக்காலம் முடிந்ததை அடுத்து கடந்த ஜூலை 30 திகதி வரை இந்த பதவிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

இதில் தற்போது தேர்வுக் குழு, தலைமைப் பயிற்சியாளருக்கான நபரை எதிர்வரும் 16 ஆம் திகதி தேர்வு செய்யவிருக்கிறது. இதற்காக சுமார் 2000 விண்ணப்பங்களில் 6 பேரை இறுதியாக அந்தக் குழு தேர்ந்தெடுத்துள்ளது. இந்த 6 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்ட பின்னர் தேர்வுக் குழு யார் பயிற்சியாளர் என்ற முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நேர்காணலுக்கு ரவி சாஸ்திரி, அவுஸ்திரேலியாவின் டோம் மூடி, நியூசிலாந்தின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன், ஆப்கானிஸ்தான் முன்னாள் பயிற்சியாளரும் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முன்னாள் வீரருமான பில் சைமன்ஸ், இந்தியாவில் இருந்து ரோபின் சிங், லால்சந்த் ராஜ்புத் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.