(நா.தினுஷா)

சட்டத்திற்கு முரணாக இரு கட்சிகளில் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டது மாத்திரமன்றி அமெரிக்க பிரஜையான தனது சகோதரனை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ நாட்டை தவறான வழிநடத்தலில் கொண்டு செல்கின்றார் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம்  குற்றம் சாட்டினார்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும் அதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும்  குறிப்பிட்டுள்ளார். 

ஊடகங்களுக்கு விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பிரதிநிதியாகவே  பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். 

 மறுப்புறம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினராக இருந்துக் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி என்ற பெயரில் தமது சகோதரர்களுடன் இணைந்து புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்கி கடந்த ஞாயிற்று கிழமை அந்த கட்சியின் தலைமைத்துவத்தையும்  பொறுப்பேற்று கொண்டார்.  

சுதந்திர கட்சியின் யாப்பை மீறி இவ்வாறு  செயற்படும்  மஹிந்த ராஜபக்ஷ  நாட்டில் சட்ட ஆட்சியை எவ்வாறு பாதுகாப்பார் என்ற கேள்வி எழுகிறது. 

 அதேபோன்று நீதிமன்றத்தின் முன்னிலையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு  பிரதிவாதியாக இருக்கும் அமெரிக்க  பிரஜையான தனது சகோதரரை அந்த புதிய கட்சியின் ஜனாதபதி வேட்பாளராகவும் அறிவித்துள்ளார்.  இது நாட்டின் சட்டத்துக்கு  புறம்பானதும் மக்களை தவறான வழியில் கொண்டுச் செல்வதுமாகவே காணப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.