நியூஸிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் பேடாடியில் பெயர் மற்றும் எண்கள் பொறிக்கப்பட்ட புதிய ஜெர்சியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 டெஸ்ட், 3 இருபதுக்கு - 20 சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

அதன்படி இவ்விரு அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நாளைய தினம் காலியில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந் நிலையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள வீரர்கள் அணியும் புதிய ஜெர்சியை இன்றைய தினம் அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி இப் போட்டியில் இலங்கை அணி வீரர்கள் வெறும் வெள்ளை நிற உடை அணியாமல் அந்த வெள்ளை நிற உடையில் தங்களது பெயர் மற்றும் எண்கள் பொறிக்கப்பட்ட ஜெர்சியுடன் விளையாடவுள்ளனர்.

ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளில் வீரர்கள் தங்களின் ஜெர்சியில் பெயர் மற்றும் எண்களுடன் விளையாடி வருகின்றனர். 

ஆனால் டெஸ்ட் போட்டியில் பெயர் மற்றும் எண் இல்லாமல் இருந்து வந்தது. இந்த சூழலில் வரலாற்றில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் பெயர் மற்றும் எண் பொறிக்கப்பட்ட ஜெர்சிகளை ஐ.சி.சி கடந்த முதலாம் திகதி அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின்போது அறிமுகப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.