(எம்.மனோசித்ரா)

செப்டெம்பர் மாதம் மூன்றாம் வாரமளவில் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராக வேண்டும். ஆனால் அன்றைய தினம் வரையில் ஜனாதிபதித் தேர்தல் தான் நடத்தப்படும் என்று உறுதியாகக் கூற முடியாது என்று தெரிவித்த சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, சட்டத்திற்கமைய மாகாண சபைத் தேர்தலே நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த மஹிந்த தேசப்பிரிய தெரிவித்ததாவது :  

சட்டத்திற்கமைய மாகாண சபைத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும். மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகவே இருக்கிறது. 

அத்தோடு செப்டெம்பர் மாதம் மூன்றாவது வாரத்திலிருந்து ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆயத்தமாக முடியும். எனினும் அது வரையில் ஜனாதிபதித் தேர்தல் தான் இடம்பெறும் என்று உறுதியாகக் கூற முடியாது. 

எவ்வாறிருப்பினும் எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதியிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் அதற்கு முன்னதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தேர்தலை நடத்த முடியும். 

இவற்றை விடவும் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கும் எந்த சந்தர்ப்பத்திலும் நாம் தயாராகவே இருக்கின்றோம். எந்த சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்தைக் களைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்ல முடியும். ஆனால் அவ்வாறு இடம்பெறாது என்ற நம்பிக்கை இருக்கிறது. 

அதனால் தான் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஆவணங்களையும் இரண்டு முறைமையிலும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக ஆவணங்களையும் தயாரித்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.