நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்றார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், நான் உங்கள் ரசிகை; உங்களிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன் என சொல்லி விட்டு, பிரியங்கா சோப்ராவிடம் சர்ச்சைக்குரிய ஒரு கேள்வியைக் கேட்டார்.

அந்தப் பெண் கேட்ட கேள்வி, பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாமை இந்திய போர் விமானங்கள் தாக்கி அழித்தன. அப்போது, இந்திய பாதுகாப்புப் படைக்கும், இராணுவ வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தீர்கள். யுனிசெப்பின் அமைதிக்கான நல்லெண்ண தூதராக இருக்கும் நீங்கள், போருக்கு ஆதரவு தெரிவிக்கலாமா...? இது உங்களின் நடுநிலைமையா? உங்களையும், உங்கள் படங்களையும் நாங்கள் ரொம்பவே ரசிக்கிறோம்; நேசிக்கிறோம். ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான அணு ஆயுத நடவடிக்கைக்கு ஆதரவாக இருப்பது சரியல்ல என கேட்டிருந்தார். 

இதற்கு பதில் அளித்த பிரியங்கா சோப்ரா, பாகிஸ்தானில், எனக்கு அதிக நண்பர்கள் உண்டு. நான் ஒரு போதும் போரை ஆதரிப்பவர் அல்ல; போரைத் தூண்டவும் மாட்டோம். அதே நேரம், நான் ஒரு இந்தியர் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அதனால், இந்திய நாட்டின் மீது தேச பக்தி இருக்கிறது. இதற்காக, என்னை நேசித்த, நேசித்து கொண்டிருப்பவர்களின் மனம் காயப்பட்டிருந்தால் வருந்துகிறேன். நாம் அன்பு செலுத்தவே இங்கு உள்ளோம். இருப்பினும், இப்படியொரு கேள்வியை கேட்ட உங்களுக்கு என்னுடைய நன்றி.

இவ்வாறு பிரியங்கா சோப்ரா பதில் அளித்துள்ளார்.