ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் இருக்கும் குப்­பை­களை வெளியே கொண்டு வந்து கழுவ வேண்டாம். கட்­டா­யப்­ப­டுத்தி ஒரு கூட்­ட­ணியை உரு­வாக்க வேண்­டிய தேவை எமக்கு இல்லை. 

உங்கள் கட்சி தலை­மை­யகம் சிறி­கோத்­தா­வுக்கு சென்று உங்கள் கட்சி தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலையில் துப்­பாக்­கியை வைத்து நாம் இந்த கூட்­டணி உடன்­பாட்டில் பல­வந்­த­மாக கையெ­ழுத்­திட முயற்­சிக்­க­வில்லை. ஆணும் சம்­மதம் தெரி­விக்க வேண்டும். பெண்ணும் சம்­மதம் தெரி­விக்க வேண்டும். 

அப்­போதே திரு­மணம் நடக்கும். இதுவும் அப்­ப­டிதான் என தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணி-­ஜ­ன­நா­யக மக்கள் முன்­னணி தலை­வரும், தேசிய ஒரு­மைப்­பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்­பாடு, இந்து சமய விவ­கார அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் கூறி­யுள்ளார்.   

மாத்­தறை தெணி­யா­வையில் நடை­பெற்ற கூட்­டத்தில் அமைச்சர் மேலும் கூறி­யுள்­ள­தா­வது, 

 கூட்­டணி அமைப்­ப­தற்கும், ஜனா­தி­பதி வேட்­பாளர் தெரிவு செய்­யப்­ப­டு­வ­தற்கும் எவ்­வித தொடர்பும் இல்லை. உண்­மையில் இங்கே பெரும் பிரச்­சி­னை­யில்லை. குழப்­ப­ம­டைய தேவை­யில்லை. 

இந்த முறை ஜனா­தி­பதி வேட்­பாளர் ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பி­ன­ராக இருக்க வேண்டும் என நாம்தான் தீர்­மா­னித்தோம். இந்த யோச­னையை நானே முதலில் ஜன­வரி மாதமே கட்­சித்­த­லைவர் கூட்­டத்தில் தெரி­வித்தேன். 

ஏனெனில் கடந்த 2010ம் ஆண்டும், 2015ம் ஆண்டும் வெளியில் இருந்­துதான் வேட்­பா­ளர்கள் வந்­தார்கள். 2010ம் ஆண்டு வந்த சரத் பொன்­சேகா இப்­போது ஐதே­க­வுக்கு உள்ளே இருந்­தாலும், அப்­போது வெளியில் இருந்தே வந்தார். இந்த முறை ஐதே­கவின் உள்ளே இருந்து வேட்­பா­ளரை தேர்வு செய்­வதே நியா­ய­மா­னது என நானே முதலில் சொன்னேன்.  

ஆகவே இம்­முறை நீங்­களே தெரிவு செய்­யுங்கள் என ஐதே­க­விடம் இந்த பொறுப்பை நாம் ஒப்­படைத்த் விட்டோம். ஆகவே ஐதே­கவில் உள்ள சேன­நா­யக்­கவின், ஜய­வர்­த­னவின், பிரே­ம­தா­சவின் புத்­தி­ரன்கள், பேரன்கள், கொள்­ளு­பே­ரன்கள் சிந்­தித்து ஒழுங்­கான முடிவை எடுங்கள்.

ஒரு­நாளில் இந்த பிரச்­சி­னையை தீர்க்­கலாம். ஐக்­கிய தேசிய கட்சி செயற்­கு­ழு­வையும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குழு­வையும் கூட்­டுங்கள். தேநீர், கோப்பி வழங்­குங்கள். கூட்­டத்தில் எவ­ருக்கு பெரும்­பான்மை ஆத­ரவு இருக்­கின்­றது என்­பதை கண்­ட­றி­யுங்கள். 

உண்­மையில் இந்த தாம­தத்­துக்கு நாம் கார­ண­மில்லை என்­பதை நாடு முழுக்க உள்ள அடி­மட்ட ஐதேக தொண்­டர்­க­ளுக்கு நான் தெரி­வித்­து­கொள்ள விரும்­பு­கிறேன். உங்கள் கட்­சிக்குள் இருந்து வேட்­பா­ளரை தெரிவு செய்­யுங்கள் என நாம் இந்த பொறுப்பை ஐதேக செயற்­கு­ழு­வுக்கு ஒப்­ப­டைத்து நீண்ட நாட்கள் ஆகி­விட்­டன. ஆகவே தாமதம் அங்­கேதான். மக்கள் விரும்பும் வேட்­பா­ளரை பெய­ரி­டு­வதை ஐதே­கவின் உள்ளே இருந்து தடுத்து கொண்டு சிலர் இருக்­கின்­றனர். இவர்கள் எதிர்­கட்­சி­யுடன் இர­க­சிய உடன்­பாடு கண்­டுள்­ளார்கள் எனவும் நான் சந்­தே­கிக்­கின்றேன்.      

இனிமேல் நாம் பொறுக்க மாட்டோம். எம் பொறு­மைக்கும் ஒரு எல்லை உண்டு. உங்கள் வேட்­பாளர் பெயரை எங்­க­ளுக்கு அறி­வி­யுங்கள். நீங்கள் சொல்லும் வேட்­பா­ள­ருடன் எமக்கு உடன்­பாடு இருந்தால் நாம் உங்­க­ளுடன் வரு­கிறோம். இல்­லா­விட்டால் வெளி­யே­று­கிறோம். நீங்கள் உங்கள் வேட்­பா­ளரை அழைத்­துக்­கொண்டு தேர்­த­லுக்கு செல்­லுங்கள். 

ஜனா­தி­பதி தேர்­தலின் வென்றால் போதாது. அதன்­பி­றகு பாரா­ளு­மன்ற தேர்­த­லிலும் வெல்ல வேண்டும். அப்­போ­துதான் ஸ்திர­மான அர­சாங்­கத்தை அமைக்க முடியும். பாரா­ளு­மன்ற தேர்­தலில் ஐதே­க­வு­டன்தான் நாம் வர வேண்டும் என்று சொல்லி எம்மை பய­மு­றுத்த முயல வேண்டாம். தமிழ் முற்­போக்கு கூட்­டணி நாடு முழுக்க அனைத்து மாவட்­டங்­க­ளிலும் தனித்து போட்­டி­யிட தயார். 

எங்­க­ளுக்கு உடன்­பாடு இல்­லாத வேட்­பா­ளரை ஜனா­தி­பதி தேர்­தலில் நீங்கள் கொண்டு வந்­தாலோ, அதேபோல் தேவை­யில்­லாமல் உட்­கட்சி சண்டை போட்­டுக்­கொண்டு, உங்கள் கட்­சிக்குள் இருக்கும் குப்­பை­களை வெளியே கொண்டு வந்து கழுவி நாற­டித்­தாலோ, நாம் கூட்­ட­ணியில் இருந்து வெளி­யே­றுவோம். எம்மை போலவே ஏனைய சிறு கட்­சி­களும் வெளி­யேறும் என நான் நினைக்­கிறேன். 

அப்­புறம் ஐதேக தனி­யாக சுடு­காட்­டுக்கு செல்­லலாம். உங்­க­ளுடன் சுடு­கா­டு­வரை பய­ணிக்க நாம் தயா­ரில்லை. இந்­நாட்டின் மிகப்­பெரும் கட்­சி­யான ஐக்­கிய தேசிய கட்­சியை அதற்­குள்ளே இருக்கும் சிலர், இன்­னமும் குறைந்­த­பட்சம் பதி­னைந்து வரு­டங்­க­ளுக்கு தலையெடுக்க விடாமல் அரசியல் புதைகுழியில் தள்ள முயற்சிக்கிறார்கள். கட்சிக்கு உள்ளே இருந்துக்கொண்டு சதித்திட்டம் தீட்டுகிறார்கள். அது நாம் அல்ல. அவர்கள் ஐதேகவின் உள்ளேதான் இருக்கிறார்கள். நான் சொல்வதில் உள்ள உண்மையை நாடு முழுக்க உள்ள இலட்சக்கணக்கான ஐதேகவின் அடிமட்ட உறுப்பினர்கள் புரிந்துக்கொள்வார்கள் என நான் நம்புகிறேன்.