Published by T. Saranya on 2019-08-13 10:35:03
சப்ரகமுவ மாகாணத்தின் பல பாகங்களிலும் கடந்த சில திங்களாக பெய்து வரும் அடை மழை மற்றும் பலத்த காற்று காரணமாக 254 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் இவற்றில் மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தங்களால் 280 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து நூற்று இருபத்து ஒன்பது பேர் வரையில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.குறிப்பாக இரத்தினபுரி மாவட்டத்தில் நிவித்திகல, எலபாத, இரத்தினபுரி, அயகம, எகலியகொட, இபுல்பே, பலாங்கொடை, கிரியெல்ல, குருவிட்ட ஆகிய பகுதிகளும், கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்ல, புளத்கோபிடிய, அரநாயக்க, தெஹியோவிட்ட, தெரணியகல, எட்டியாந்தோட்ட ஆகிய பகுதிகளிலுமே இவ்வாறு சேதம் ஏற்பட்டுள்ளது. இவற்றில் எகலியகொடை பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு பேரும் நிவித்திகல பிரதேச செயலகப் பிரிவில் ஒருவருமாக மூன்று பேர் அனர்த்தங்களால் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை தற்போது மழை மற்றும் பலத்த காற்று ஓரளவு குறைவடைந்து காணப்படுவதாகவும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரண ங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.