பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்திற்கு ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

‘மெரீனா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாண்டிராஜ். அதன்பிறகு அவரின் இயக்கத்தில் உருவான ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்ற படத்திலும் நடித்திருந்தார். இது தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திலும் சிவகார்த்திகேயன் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் தயாரிக்க, சிவகார்த்திகேயனுடன் ‘துப்பறிவாளன்’ படப்புகழ் நடிகை அனு இம்மானுவேல்,  ஐஸ்வர்யா ராஜேஷ் ,பாரதிராஜா ,சமுத்திரக்கனி, நட்ராஜ், சூரி, யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ரூபன் எடிட்டிங் செய்கிறார். 

கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் கிராமப்பகுதி பின்னணியாகக் கொண்ட குடும்ப கதையில் அண்ணன் தங்கை உறவை மையப்படுத்தி நம்ம வீட்டு பிள்ளையை உருவாக்கி வருகிறார் இயக்குனர் பாண்டிராஜ்.  டி இமான் இசையமைத்து வரும் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .

வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் என மூன்று படங்களும் தொடர்ந்து பெரிய அளவில் வெற்றி பெறாததால், ஒரு பிரம்மாண்டமான கொமர்ஷல் வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதனிடையே ‘எங்க வீட்டு பிள்ளை ’என்று படத்திற்கு பெயர் சூட்ட எண்ணியிருந்த படக்குழுவினருக்கு, அந்த டைட்டில் கிடைக்காததால், ‘நம்ம வீட்டு பிள்ளை’ என்று சற்று திருத்தம் செய்து, ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறார்கள் என திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.