கிளிநொச்சி முரசுமோட்டை மருதங்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக் கிழமை அத்துமீறி  மாற்றுத்திறனாளி ஒருவரின் வயலுக்குள் அறுவடை மேற்கொண்ட சம்பவத்தின் போது ஏற்பட்ட கைகலப்பில் குறித்த பிரதேசத்தை சேர்ந்த ஊடகவியலாளர்  ஒருவர் உட்பட ஏழு  பேர்  கிளிநொச்சி பொலீஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது  குறித்த பிரதேசத்தில் மாற்றுவலுள்ள இளைஞன் ஒருவர் தனது தந்தையை தொடர்ந்து ஒன்றரை ஏக்கர் வயல் காணியில் சுமார் முப்பது வருடங்களாக பயிர்ச்செய்து வருகின்றார். 

இக் காணிக்கு அருகில் உள்ள மூன்று ஏக்கர் காணியின் பெண் ஒருவர்  பிரதேச  ஊடகவியலாளர் ஒருவருடன் இணைந்து  அவ் இளைஞனின் காணியை ஆக்கிரமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளதோடு, கடந்த வெள்ளிக் கிழமை அவர்களின்  காணிக்குள் அத்துமீறி சென்று  அறுவடையிலும் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனை குறித்த இளைஞன் கமக்கார அமைப்பின் உதவியுடன் சென்று தடுக்க முற்பட்ட போது  அத்துமீறி அறுவடையில் ஈடுப்பட்ட பெண் அவர்கள் மீது மிளகாய் தூள் தாக்குதலை மேற்கொண்டுள்ளார். 

இதன் போது இரண்டு தரப்பினர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தினை தொடர்ந்து  விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸார்  ஊடகவியலாளர்  உட்பட ஏழு  பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நாளைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.