(எம்.ஆர்.எம்.வஸீம்)

வடக்கில்  வெள்ளைவேன் மூலம் இடம்பெற்று வரும் கடத்தல்களை அரசாங்கம் நிறுத்தாவிட்டால் மீண்டும் மனித வெடிகுண்டுதாரிகள் உருவாகலாம். இதன் பின்னணியில் ஒன்றிணைந்த எதிர்க் கட்சியினர் உள்ளனரா என்பதை அரசாங்கம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த அரசாங்க காலத்தில் போன்று நல்லாட்சி அரசாங்கத்திலும் வடக்கில் வெள்ளைவேன் கலாசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா? என அங்குள்ள மக்கள் கேட்கின்றனர். இரவு நேரங்களில் வெள்ளைவேனில் வருவோர் முன்னாள் போராளிகள் மற்றும் சாதாரண மக்களை கடத்திச் செல்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடம் கழிந்தும் வடக்கில் அந்த மக்களின் காணிகளை இன்னும் வழங்காமல் இருக்கின்றது. அந்த இடங்களில் இருக்கும் இராணுவத்தினர் ஏன் இருக்கின்றார்கள் என்று தெரியாமல் இருக்கின்றனர். யுத்தம் ஒன்றுக்கு தயாரான நிலையில் இருப்பதுபோன்றே அங்கு இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால் இரவு நேரங்களில் வரும் வெள்ளைவேன் தொடர்பில் இராணுவத்தினர் எதுவும் அறியாமல் இருக்கின்றனர். அப்படியென்றால் அரசாங்கத்தின்  ஸ்திரத்தன்மையை குலைப்பதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நடவடிக்கையா என்பது தொடர்பாக அரசாங்கம் தேடிப்பார்க்க வேண்டும்.