மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டக்வேர்த் லூவிஸ் முறைப்படி 59 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அமெரிக்கா, மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியுடன் 3 இருபதுக்கு - 20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் இருபதுக்கு - 20 தொடரை 3:0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கயானாவில் நடந்த முதலாவது ஆட்டம் மழை காரணமாக இடையில் இரத்து செய்யப்பட்டது. 

இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2 ஆவது ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 279 ஓட்டங்களை குவித்தது.

இந்திய அணி சார்பில் தவான் 2 ஓட்டத்துடனும், ரோகிசத் சர்மா 18 ஓட்டத்துடனும், விராட் கோலி 125 பந்துகளை எதிர்கொண்டு 14 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் அடங்கலாக 120 ஓட்டத்துடனும், ரிஷாத் பந்த் 20 ஓட்டத்துடனும், ஸ்ரேஸ் ஐயர் 71 ஓட்டத்துடனும், கேதர் யாதவ் 16 ஓட்டத்துடனும், புவனேஸ்வர் குமார் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், ஜடேஜா 16 ஓட்டத்துடனும், மொஹமட் ஷமி 3 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் பிரித்வெய்ட் 3, ரோஸ்டன் சேஸ், ஜோசன் ஹோல்டர் மற்றும் ஷெல்டன் கொர்ட்ரல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

280 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சார்பில் கிறிஸ் கெய்ல் மற்றும் இவின் லீவிஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். 

அதில் கிறிஸ் கெய்ல் 11(24) ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஷெய் ஹோப் 5(10) ஓட்டத்துடன் வெளியேறினார். பின்னர் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. 

தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு 270 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய இவின் லீவிஸ் மற்றும் ஹெட்மயர் ஜோடியில், ஹெட்மயர் 18(20) ஓட்டத்துடன் பிடிகொடுத்து வெளியேறினார். தொடர்ந்து தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவின் லீவிஸ் தனது அரை சதத்தை பதிவு செய்த நிலையில் 65(80) ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். அடுத்ததாக நிகோலஸ் பூரன் மற்றும் ரோஸ்டன் சேஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிகோலஸ் பூரன் 42(52) ரன்களில் வெளியேறினார். அவரைதொடர்ந்து களமிறங்கிய ரோஸ்டன் சேஸ் 18(23) ஓட்டத்துடனும், பிராத்வெய்ட் (0) , கெமார் ரோச் (0) ஆகியோர் ஓட்டம் ஏதும் எடுக்காமலும், ஷெல்டன் கொர்ட்ரல் 17(18) ஓட்டத்துடனும், உஷேன் தோமஸ் (0) ஓட்டம் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் கேப்டன் ஹோல்டர் 13(19) ஓட்டத்துடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

முடிவில் மேற்கிந்தியத்தீவுகள்அணி 42 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டக்வெர்த் லூவிஸ் முறையில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. 

இந்திய அணியின் சார்பில், சிறப்பாக பந்து வீசிய புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் மற்றும் மொஹமட் ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா மற்றும் கலீல் அஹமட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளதுடன் இவ்விரு அணிகளுக்கிடையேயான தொடரின் இறுதியும் மூன்றாவதுமான போட்டி எதிர்வரும் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.