(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படும் சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு எவ்வித அநீதியும் இடம்பெற இடமளிக்கப்பட மாட்டாது. அவர்கள் எம்முடன் இணைந்து செயற்படுவதில் எந்தத் தடையும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி மாவாட்ட உள்ளுராட்சி மன்ற  தலைவர்கள், உப தலைவர்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் நேற்று விஜேராம மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் இல்லத்தில் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இந்த சந்திப்பின் போதே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

நாம் அனைவரும் இலங்கையர்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தமையினாலேயே நாம் கட்சியிலிருந்து விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனைத் தவிர எமக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் வேறு எவ்வித பிரச்சினையும் இல்லை. 

தற்போது மீண்டும் அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது நாம் ஒன்றிணைந்து செயற்படுவதில் பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை. எனவே பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் யாருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் அநீதி இழைக்கப்படுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது. 

கடந்த 2015 ஆம் ஆண்டு சுதந்திர கட்சியிலுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் என்னுடைய வெற்றிக்காகவே பாடுபட்டார்கள் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். மிகச் சிறிய குழுவொன்று மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சிக்காக பாடுபட்டது. அதனை தற்போது சிலர் மறந்துவிட்டார்கள். எனினும் அரசியலில் பொறுப்புடன் செயற்பட வேண்டும். உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் ஒவ்வொரு வாக்குகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே இருக்கும். 

கடந்த வாரம் எனக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு சுமூகமானதொரு சந்திப்பாக அமைந்தது. அதற்கிணங்க அவர் சிறந்தவொரு தீர்மானத்தில் இருப்பதாக நான் நம்புகின்றேன். எனவே எமக்கு ஒன்றிணைந்து பயணிப்பது கடினமானதல்ல. 

பொதுஜன பெரமுன சம்மேளனத்தில் நாம் வேட்பாளரை அறிவிப்போம். அதனைத் தொடர்ந்து தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும். அத்தோடு பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என்றார். 

இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்த உள்ளுராட்சி மன்ற  தலைவர்கள், உப தலைவர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள்  உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவால் பெயர் குறிப்பிடப்படும் வேட்பாளருக்கே தமது ஆதரவை வழங்கப் போவதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளனர்.