அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன முன்னணியின் சார்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவை களமிறக்கினால் அவரை எதிர்கொண்டு மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சிப்பீடத்தில் அமரக்கூடிய சக்தியை கொண்டிருக்கும் ஒரேநபர் சஜித் பிரேமதாசவே என்று டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், தகவல் தொழிநுட்ப (அமைச்சரவை அந்தஸ்து அற்ற) அமைச்சரான அஜித் பீ பெரேரா வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- தேசிய ஜனநாயக கூட்டணியை அமைப்பது தொடர்பான செயற்பாடுகள் எந்த மட்டத்தினை எட்டியுள்ளன?

பதில்:- கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அப்பேச்சுக்கள் முன்னேற்றகரமாகவே இருக்கின்றன. ஆனாலும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை பெயரிடப்படுவதோடு, சஜித் பிரேமதாசவுக்கும், கூட்டணிக்கட்சித்தலைவர்களுக்கு இடையில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே கூட்டணிக்கான கைச்சாத்து இடம்பெற வேண்டும் என்பது எமது நிலைப்பாடாக உள்ளது.

கேள்வி:- இறுதியாக நடைபெற்ற சந்திப்பின்போது சஜித் பிரேமதாச புதிய கூட்டணியின் பொதுச்செயலாளர் பதவியை கோரியிருந்தார் அல்லவா? ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டால் அந்த நிலைப்பாட்டில் மாற்றமேற்படுமா?

பதில்:- சஜித் பிரேமதாசவின் இணக்கப்பாட்டின்மையுடனும், மத்திய செயற்குழுவின் அனுமதியின்றியும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கான யாப்பு அமைக்கப்பட்டமையின் காரணத்தால் தான் அவர் பொதுச்செயலாளர் பதவியைக் கோரியிருந்தார். பொறுப்புக்கூறுவதிலிருந்து விலகிநிற்கும் தனியொரு நபருக்கு அதிகாரங்கள் வழங்குவது தவறானது என்ற ஜனநாயகச் சிந்தனையுடன் தான் அவ்வாறானதொரு நிபந்தனையை சஜித் விதித்திருந்தார்.

தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வினை பிற்போட்டுள்ளதோடு யப்பினையும் மறுசீரமைக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளார். சஜித் பிரேமதாசவும் புதிய கூட்டணியில் பங்கேற்கும் தரப்புக்களுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளார். ஆகவே அந்த நிபந்தனை தற்போது அவசியமில்லை. ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்படுகின்றபோது, புதிய கூட்டணிக்கு ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவரும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நபர் ஒருவருக்கே பொதுச்செயலாளர் பதவியை வழங்க வேண்டும்.

கேள்வி:- இறுதியாக நடைபெற்ற கலந்துரையாடலில் உங்களுக்கும் பிரதமருக்குமிடையில் தர்க்கரீதியான முரண்பாடுகள் வலுத்துச்சென்றதாக கூறப்படுகின்றதே?

பதில்:- எனக்கும், பிரதமருக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் எவ்விதமான பிரச்சினைகளும் கிடையாது. மத்தியசெயற்குழுவின் அனுமதியின்றி கூட்டணிக்கான யாப்பினை அமைக்கும் முயற்சிகளையும், அதற்கான முன்வைக்கப்பட்ட கருத்துக்களையும் நான் கடுமையாக எதிர்த்திருந்தேன். அச்சந்திப்பில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த கூட்டணிக்கான உத்தேச வரைபில் கூறப்பட்டிருந்த பல சரத்துக்கள் தொடர்பிலும் நான் உள்ளிட்டவர்களுக்கு உடன்பாடுகள் காணப்பட்டிருக்கவில்லை. இதனால் தான் கருத்தியல் ரீதியான முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. நான் ஜனநாயகத்தினை நேசிக்கின்ற ஒரு நபர் என்ற வகையிலும், இந்த நாட்டின் எதிர்காலத்தினை விரும்பும் பிரஜைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் என்ற வகையிலும் தான் அவ்வாறு முரண்பட வேண்டி ஏற்பட்டிருந்தது.

கேள்வி:- ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு சபாநாயகர் கருஜெயசூரிய, அமைச்சர் சஜித் பிரேமதாச இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளதா?

பதில்:- கட்சியில் பல்வேறு தரப்பினரும் சஜித் பிரேமதாசவையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள். சதாரண பொதுமக்களும் அதனையே எதிர்பார்கின்றார்கள். இதனைவிடவும், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுவிலும் சரி, மத்திய செயற்குழுவிலும் சரி சபாநாயகர் கரு ஜயசூரியவின் பெயர் முன்மொழியப்படவே இல்லை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் குறித்து கலந்துரையாடப்படவில்லை என்பதை பொறுப்புடன் கூறுகின்றேன். சஜித் பிரேமதாசவின் பெயர் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டு பேசப்படுகின்றது.

கேள்வி:- ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை களமிறங்க வேண்டும் என்ற கருத்துக்கள் எழுந்திருக்கவில்லையா?

பதில்:- இல்லை. எந்தவொரு கலந்துரையாடல்களிலும் அவரது பெயரும் முன்மொழியப்பட்டிருக்கவில்லை.

கேள்வி:- உங்களுடைய கருத்துப்படி ஐ.தே.க.வில் அதிகளவானவர்கள் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க விரும்புகின்றார்கள் என்றால் ரணில், கரு, சஜித் என்ற குழப்பங்களை கடந்து உடன் தீர்மானம் எடுக்க முடியாதிருக்கின்றது?

பதில்:- ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறங்குவதற்கு தனிப்பட்ட முறையில் விருப்பம் கொண்டிருக்காத, எதிர்மறையான நிலைப்பாடுகளை வெளியிடும் சிலர் கட்சியினுள் உள்ளார்கள். அத்தகைய சிலராலே சஜித் பிரேமதாச மீது சேறுபூசம் நடவடிக்கைகள் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் தான் சஜித் பிரேமதாச வெற்றிபெறுவார், அனைவரின் ஆதரவையும் பெறுவார் என்பதை தெரிந்துகொண்டும் அவரைப் பெயரிடுவதில் தாமதங்கள் நிலவுகின்றன.

கேள்வி:- உங்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்கள், சஜித் பிரேமதாசவை தனிப்பட்ட காரணங்களுக்காக சிலர் எதிர்ப்பதாக கூறினாலும் அவர்கள் சிரேஷ்டத்துவத்தினை மையப்படுத்துகின்றார்களே?

பதில்:-அவ்வாறு இல்லை. அவர்களுக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் தான் இருக்கின்றன. சஜித் பிரேமதாசவை எதிர்ப்பவர்கள் ஊழல், மோசடிகளுடன் தொடர்பு பட்டவர்கள். அவர்களால் தான் எமது கட்சிக்கும் களங்கம் ஏற்பட்டது. சஜித் பிரேமதாச ஊழல் மோசடி உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். அதனை மையப்படுத்தியே அவர்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்துகின்றனர்.

கேள்வி:-நீங்கள் உள்ளிட்டவர்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தினை முன்மொழிந்தபோது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரதிபலிப்பு எவ்வாறு இருந்தது?

பதில்:- அவர் அமோதிக்கவுமில்லை. நிராகரிக்கவுமில்லை. எதனையுமே பிரதிபலித்திருக்கவில்லை.

கேள்வி:-ஜனாதிபதி வேட்பாளராக சஜித் நியமிக்கப்பட்டால் பிரதமர் பதவிக்கு யாரை முன்மொழிவதற்கு தீர்மானித்துள்ளீர்கள்?

பதில்:- தற்போது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக உள்ளார். அவர் தொடர்ந்தும் அரசியலில் நீடித்தால் அப்பதவியை மீண்டும் அவரே வகிப்பார். அதில் எமக்கு எவ்விதமான பிரச்சினையும் இல்லை.

எனினும் ஐ.தே.க மற்றும் பங்காளிக்கட்சி உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற ஒருவரே அப்பதவிக்கு நியமிக்கப்படுவார். அது குறித்து நாம் இன்னமும் கலந்துரையாடல்களை ஆரம்பித்திருக்கவில்லை. மேலும் நாம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான அணியினரும் இல்லை.

கேள்வி:- உங்களுடைய கட்சியின் சார்பில் ஜனாதிபதியாக தெரிவு செய்யும் நபரே கட்சித்தலைமையை ஏற்க வேண்டும் என்று யாப்பில் உள்ளதல்லவா?

பதில்:- ஆம், யாப்பின் பிரகாரம் தலைமைப்பதவி அவ்வாறு தெரிவாகுவதற்கும் ஏற்பாடுகள் உள்ளன.

கேள்வி:- உங்களுடைய கூட்டணியில் உள்ள அனைத்து பங்காளிகளும் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றார்களா?

பதில்:- ஆம், தனிப்பட்ட முறையில் நான் அவர்களின் நிலைப்பாடுகள் பற்றி கேட்டபோது அவர்கள் சஜித்துக்கு ஆதரவளிப்பதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை என்றார்கள்.

கேள்வி:- பொதுஜன முன்னணியின் சார்பில் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுகின்றபோது அது உங்கள் தரப்புக்கு சவாலாக அமையும் என்று கருதுகின்றீர்களா?

பதில்:- எமது முன்மொழிவின் பிரகாரம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் எதிர்பார்க்கும் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நியமித்தால் கோத்தாபய சவாலாக இருக்க மாட்டார். கோத்தாபயவினை எதிர்கொள்ளக் கூடிய ஒரே நபர் சஜித் பிரேமதாசவே ஆவார். பெதுஜனபெரமுன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை தமிழ் முஸ்லிம் மக்களும் ஆதரிக்க மாட்டார்கள்.

கேள்வி:- சஜித் பிரேமதாசவை வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்ற நீங்கள் உள்ளிட்டவர்கள் முயற்சி வெற்றியடையாத பட்சத்தில் அடுத்து என்ன செய்வீர்கள்?

பதில்:- நாம் கட்சிக்காவும், நாட்டுக்காகவும் தான் இந்த முயற்சியை எடுத்துள்ளோம். கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் வாய்மொழிமூலமாக உறுதியளித்துள்ளனர். எழுத்துமூலமாகவும் உறுதியளிக்க தயாராகவுள்ளனர். எமக்கு அதீத நம்பிக்கை உள்ளது. ஐ.தே.க பாராளுமன்ற குழுவையும், மத்திய செயற்குழுவையும் ஒன்றாக கூட்டி பெருமன்மை ஆதரவின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.

நேர்காணல் - ஆர். ராம்