நாட்டின் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் வினைத்திறனுடன் செயற்படவல்ல முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் முன்மொழிவாக உள்ளது. இதனை மஹிந்த ராஜபக்ஷ தேசிய மாநாட்டில் தலைமையேற்று அறிவிப்பார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரன முன்னணியின் கண்டி மாவட்ட பாராளுன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்தகமே வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். 

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- பொதுஜன முன்னணியின் தலைமைத்துவத்தினை எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்பது இறுதியாகிவிட்டதா?

பதில்:- பொதுஜன முன்னணியின் தலைமைத்துவத்தினை அவர் ஏற்றுக்கொள்வார். அதில் எவ்விதமான மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை.

கேள்வி:- பொதுஜன முன்னணியின் தலைமைத்துவத்தினை ஏற்றால் எதிர்க்கட்சித்தலைவர் பதவி மற்றும் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் சிக்கிலான நிலைமைகள் ஏற்படுமல்லவா?

பதில்:- மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டுக்காகவும், மக்களின் எதிர்காலத்திற்காகவும் செயற்படும் ஒருவர். அவருக்கு பதவிகள் என்பது பெரும் பிரச்சினைக்குரிய விடயம் அல்ல. பதவிகளில் தானே இருக்க வேண்டும் என்பதற்காக அவர் செயற்படுவதில்லை. நாட்டிற்காகவே தீர்மானங்களை எடுக்கின்றார். ஆகவே எந்த நிலைமைகளுக்கும் முகங்கொடுக்க அவரும் நாமும் தயாராகவே உள்ளோம்.

கேள்வி:- பொதுஜன முன்னணியின் தலைமைத்துவத்தினை எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்கின்றபோது ஜனாதிபதி வேட்பாளர் நிச்சயமாக அறிவிக்கப்படுவாரா?

பதில்:- ஆம், தலைமைத்துவத்தினை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றவுடன் அவரே ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

கேள்வி:- முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு உங்களுடைய தரப்புக்குள்ளேயே எதிர்ப்புக்கள் காணப்படுகின்றனவே?

பதில்:- அவ்வாறு எந்த எதிர்ப்புக்களும் காணப்படவில்லை. அவை அனைத்தும் வெறுமனே அவர் மீதுள்ள அச்சத்தின் காரணத்தால் வெளியிடப்படும் புனை கதைகளேயாகும்.

கேள்வி:- இடதுசாரித் தரப்புக்கள் இன்னமும் இணக்கப்பாட்டிற்கு வரவில்லையே? 

பதில்:- எம்முடன் இருக்கும் அனைத்து தரப்பினரும் இணக்கப்பாட்டினை எட்டியுள்ளார்கள். அதன் பிரதிபலிப்பினை தேசிய மாநாட்டின் மேடையில் உங்களால் அவதானிக்க முடியும். எமது தரப்பானது, நாட்டினை அழிக்கும் கொள்கைகளை கொண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டினைக்

கொண்டிருக்கின்றது. மேலும் நாட்டின் தேசியபாதுகாப்பு, பொருளாதார அபிருத்தி, நிலையான சமாதானம் உள்ளிட்டவற்றில் கவனத்தில் கொண்டு எதிர்காலம் மிக்க இலங்கையை கட்டியெழுப்பவல்ல ஊழல் மோடிகள் அற்ற தலைமைத்துவதற்கு ஆதரவளிப்பததெனவும் ஏக தீர்மானித்திற்கு வந்துள்ளன. இந்த இலட்சணங்களைக் கொண்ட தலைமைத்துவப் பண்புகள் நிறைந்த ஒருநபராக கோத்தாபய ராஜபக்ஷவே காணப்படுகின்றார் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. ஆகவே அவரை யாரும் விமர்சிக்கவில்லை. அவரை ஆதரிப்பதென்றே அனைவரும் ஒருமித்து இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

கேள்வி:- கோத்தாபயவின் இரட்டைக்குடியுரிமை தொடர்பில் குழப்பங்கள் நீடிக்கின்றதோடு வழக்குகளும் நிலுவையில் உள்ளதே?

பதில்:- அவர் அமெரிக்க பிராஜாவுரிமையை முழுமையாக நீக்கியுள்ளார். அதில் எந்தவிமான சர்ச்சைகளும் இல்லை. அவர் மீது சேறுபூசுவதற்காகவே போலியான ஆவணங்களை தயார்ப்படுத்தி வெளியிடுகின்றார்கள். ஆவர் தற்போது இலங்கை பிரஜையாவார். அவரிடத்தில் இலங்கை பிரஜைகளுக்கான கடவுச்சீட்டே காணப்படுகின்றது.

அவருக்கு எதிராக அரசியல் காரணங்களுக்காகவே வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. அவ்வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், அதற்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி கோத்தாபயவை அரசியலில் பிரவேசிப்பதை தடைசெய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்திருந்தது. இருப்பினும் அவை அனைத்தும் தோல்வியுற்றுள்ளன. இது அவருகல்ல நாட்டுக்கும் கிடைத்துள்ள பெரும் வாய்ப்பாகும்.

கேள்வி:- அதிகாரப்பகிர்வுக்கு எதிரான நிலைப்பாடுகளையே கோத்தாபய கொண்டிருப்பதாக பொதுப்படையில் கூறப்படுகின்றதே?

பதில்:- இல்லை. அது தவறான கருத்துப்பகிர்வாகும். தற்போது அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கு அவர் தயாராகவே உள்ளார். அதுமட்டுமன்றி 13ஆவது திருத்தச்சட்டத்தில் ஆரம்பித்து அதற்கு அப்பால் அதிகாரபகிர்வு தொடர்பில் கலந்துரையாடல்களைச் செய்வதற்கும் அவர் தயாராகவே உள்ளார். குறிப்பாக தமிழ் மக்களுக்கு நியாயமான அதிர்காரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாகவே இருக்கின்றார். அந்த அதிகாரப்பகிர்வு 13இலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதனையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

பொலிஸ், காணி அதிகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் அவர் தயாராகவே உள்ளார். ஆகவே கோத்தாபய அதிகாரப்பகிர்வுக்கு எதிரானவர் என்பது பொய்யான பிரச்சாரமாகும்.

கேள்வி:- ராஜபக்ஷ தரப்பின் ஆட்சி அனுபங்களைக் கொண்டிருக்கும் தமிழ் மக்களிடத்தில் மீண்டும் நம்பிக்கை வையுங்கள் என்று கோருவீர்கள்?

பதில்:- போர் நிறைவுக்கு வந்தததும் நாம் வடக்கு, கிழக்கில் அபிவிருத்திகளை வெகுவாச்செய்தோம். ஜனநாயக கடமைகளை செய்வதற்கு வழியேற்படுத்தினோம். இனப்பிரச்சினைக்கான தீர்வினை மட்டுமெ எம்மால் வைக்க முடியாது போய்விட்டது. ஆனால் ஐ.தே.க ஆட்சியாளர்கள் பதவியேற்று ஐந்தாண்டுகளாகின்றது. கூட்டமைப்பு அவர்களுக்கு ஆதரவினை வழங்குகின்றது. அதனால் தமிழ் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன?

மாகாண ஆட்சி இல்லை, அபிவிருத்தி இல்லை, தீர்வு இல்லை. ஆனால் சுமந்திரன் போன்றவர்கள் அலரிமாளிகையை தமது இருப்பிடமாக்கியுள்ளார்கள்.

ஐ.தே.க அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகும் ஒவ்வாரு சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பு அவர்களை பாதுகாத்து சுயலாபங்களை அடைந்துகொள்கின்றது. ஆகவே வடக்கு மக்கள் ஒருவிடத்தினை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். போரை நிறைவுக்கு கொண்டுவந்த மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாடுகளையும் கருத்துக்களையுமே இந்த நாட்டின் அனைத்துப்பிரஜைகளும் ஏற்றுக்கொள்வார்கள். எனவே தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய விடயங்கள் அவர் மூலமே கிடைக்கும் என்பதே யதார்த்தமானவிடயமாகும். வேறு யாராலும் அவர்களுக்கு தீர்வினை வழங்க முடியாது.

கேள்வி:- போர்க்குற்றங்கள் உள்ளிட்டவற்றுக்கு பொறுப்புக்கூறவேண்டியவராக கோத்தாபய உள்ளிட்ட ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் காணப்படுகையில் தமிழர்களிடத்தில் எவ்வாறு ஆதரவைக் கோருவீர்கள்?

பதில்:- போர் நடைபெறுகின்றபோது மரணங்கள் சம்பவிப்பது பொதுவானவிடயம். இருதரப்பிலும் மரணங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் போர் குற்றங்கள் நடைபெற்றன என்பது நிரூபிக்கப்படவில்லை. அதற்கு கோத்தாபய காரணம் என்றும் யாரும் கூறவில்லை. தேற்கில் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றபோது அதில் ஏற்பட்ட மரணங்களுக்கு யார் பதிலளிப்பது.

மேலும் தமிழர்களுக்கு எதிராக நாம் போர்செய்யவில்லை. அது மட்டுமன்றி கடந்தகால தேர்தலில் போரின் தளபதியாக இருந்த பொன்சேகாவுக்கு தமிழர்கள் ஆதரவளித்தார்கள். ஆகவே அவற்றையும் கவனத்தில் கொண்டு தமிழ் மக்கள் தீர்மானிக்க வேண்டும். கூட்டமைப்பின் சுயநல அரசியலுக்கான பொய்பிரசாரத்தினுள் தமிழ் மக்கள் அகப்பட்டுவிடக்கூடாது.

கேள்வி:- ஜனாதிபதி மைத்திரிக்கும் எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்தவுக்கும் இடையிலான சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டவிடயங்கள் என்ன?

பதில் :- அப்பேச்சுவார்த்தையின் போது எமது அணியுடன் இணைந்துகொள்வதாகும் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரி கூறியுள்ளார். இதன்போது ஐக்கியதேசியக் கட்சியின் சிந்தனையில் சுதந்திரக்கட்சியின் சில உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிக்கு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் பற்றி பேசப்பட்டிருக்கவே இல்லை.

மிகவும் முன்னேற்றகரமான பேச்சுவார்த்தையென்றே மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

கேள்வி:- ஜனாதிபதி மைத்திரி உங்களுடன் இணைந்தால் அவருக்கு பிரதி பிரதமர் பதவி வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதா?

பதில்:- சில யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. அவர் எம்முடன் இணைந்தால் அவருக்கும் பதிப்பில்லாது ஒருஇடம் வழக்கப்பட வேண்டும் என்பதில் நியாமிருக்கின்றது. ஆதனை கவனத்தில் கொண்டு தீர்மானங்களை எடுப்போம்.

நேர்காணல் - ஆர். ராம்