தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

“மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அரசு சார்பில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

கிருஷ்ணா நதியில் எட்டு டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இசைவு தெரிவித்துள்ளார். 

சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேச்சுக்கே இடமில்லை, மதம் ஜாதி அடிப்படையில் ஆட்சி செய்யவில்லை. வேலூர் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதாகவே கருதுகிறோம். ஸ்டாலின் கூறும்பொழுது இலட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.

 ஆனால் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள். அதனால் இது எங்களுக்கு வெற்றியாகவே கருதுகிறோம். வேலூர் மக்களவைத் தேர்தலில் ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கணிசமான வாக்குகளை பெற்றிருக்கிறது. தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்.” என்றார்.