கம்போடியாவில் இலங்கை தூதரகத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், அந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக கம்போடியாவில் கொன்சுலர் ஒருவரையும் இலங்கையில் கம்போடிய கொன்சுலர் ஒருவரையும் நியமிப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

கம்போடிய தலைநகர் நொம் பென்னில் அமைந்துள்ள விகாரையொன்றில் இன்று இடம்பெற்ற மத வழிபாடுகளில் கலந்து கொண்டதன் பின்னர் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவிக்கையில், 

பௌத்த மதத்தை அடிப்படையாகக்கொண்ட இலங்கைக்கும் கம்போடியாவிற்குமிடையிலான தொடர்பினை பொருளாதார, வர்த்தக ரீதியாகவும் வலுவடையச் செய்வதுடன், தேரவாத பௌத்த தர்மத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு கையளிப்பதற்கான செயற்பாடுகளிலும் கரங்கோர்க்க வேண்டுமென்றும். 

அந்த செயற்பாடுகளுக்காக கம்போடிய மன்னர், பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.இரு நாட்டு மகாசங்கத்தினரின் பங்களிப்பில் அச்செயற்பாடுகளை முன்னெடுத்து செல்ல தீர்மானிக்கப்பட்டு;ள்ளது. 

இலங்கைக்கும் கம்போடியாவிற்குமிடையிலான முதலீட்டு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்தன என்றார்.  

இலங்கைக்கான சுற்றுப் பயணமொன்றை மேற்கொள்ளுமாறு கம்போடிய பிரதமருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.