பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் தயாராகி வரும் ‘இந்தியன் 2’ படத்தில் நடிகர் பொபி சிம்ஹா வில்லனாக நடிக்கிறார்.

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2.0 என்ற படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர், லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்காக உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். 

இந்தப்படத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ‘துப்பாக்கி’ பட புகழ் வித்யுத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க பொலிவுட் நடிகர் அஜய் தேவகனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கால்ஷீட் இல்லாததால் அவர் நடிப்பது சந்தேகம் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டதால், வில்லனாக நடிக்க தேசிய விருதுப் பெற்ற நடிகரான பொபி சிம்ஹா தெரிவு செய்யப்பட்டு, அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்ற பின், அவர் இந்த படத்தில் நடிப்பதற்கு சம்மததித்திருக்கிறார்.

இதனிடையே இந்த படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் அர்ஜுனிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது என்பதும், நடிகர் பொபி சிம்ஹா தற்போது ‘சீறும் புலி’ என்ற படத்திலும், ‘வல்லவனுக்கு வல்லவன்’ என்ற படத்திலும் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும். இவர் கடைசியாக ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான சாமி ஸ்கொயர் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.