மரங்களுக்காக கதறி அழுத சிறுமி பசுமை தூதுவராக நியமனம்..!

Published By: R. Kalaichelvan

10 Aug, 2019 | 01:19 PM
image

ஒன்பது வயது சிறுமி ஒருவர், தான் ஆசையாக வளர்த்து வந்த இரண்டு மரங்கள் வெட்டப்பட்டதைக் கண்டு கதறி அழுதார். இந்த வீடியோவை வலைதளம் வழியாகப் பார்த்த முதல்வர், அந்த சிறுமியை பசுமை தூதுவராக அறிவித்துள்ளார்.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் உள்ள கக்சிங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரேம் குமார் - சாயா தம்பதி. இவர்களின் மகள் வாலண்டினா (9). ஐந்தாம் வகுப்பு படிக்கும் இவருக்கு, இயற்கை மீது அதிக ஆர்வம். 

இதனால், ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது தன் வீட்டருகே உள்ள ஆற்றங்கரையில் இரண்டு குல்மொஹர் மரக்கன்றுகளை நட்டு ஆசையாக வளர்த்து வந்தார்.

ஐந்தாண்டுகள் கழிந்த நிலையில், அந்த மரக்கன்று சிறிய மரங்களாக வளர்ந்தன. இந்நிலையில், அந்த ஆற்றங்கரையை சுத்தப்படுத்தும் பணி சமீபத்தில் நடந்தது. அப்போது, வாலண்டினா வளர்த்து வந்த இரண்டு குல்மொஹர் மரங்களும் வெட்டி வீழ்த்தப்பட்டன. இதைக் கண்ட வாலண்டினா கதறி அழுதார். சுற்றி இருந்தவர்கள் அவரைத் தேற்றினர். 

ஆனாலும், சிறுமி வாலண்டினாவை யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை. இந்தக் காட்சியை, சிறுமியின் உறவினர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து, சமூகவலைதளத்தில் பதிவிட்டார். அதைப் பார்த்த பலரும், இயற்கையின் மீது வாலண்டினா கொண்டிருந்த காதலைக் கண்டு உணர்ச்சி வசப்பட்டனர். 

இதனிடையே, வலைதளத்தில் அந்த வீடியோவைப் பார்த்த மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங், மரங்கள் மீது சிறுமி வைத்திருந்த அன்பைக் கண்டு நெகிழ்ந்தார். இதையடுத்து, மணிப்பூர் மாநில அரசின் பசுமை திட்ட தூதுவராக வாலண்டினாவை நியமித்து உத்தரவிட்டார்.

 இதனிடையே, அந்த ஆற்றங்கரையில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு 20 மரக்கன்றுகள் வைக்க, வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right