படை வெளியேற்றத்துக்கு அமெரிக்கா கையாளும் தந்திரோபாயம் ; வியட்நாம் ,ஆப்கான் சமாந்தரங்கள்

By R. Kalaichelvan

10 Aug, 2019 | 01:15 PM
image

ஸ் ரான்லி ஜொனி

வியட்நாம் போரில் தங்களால் வெற்றிபெற முடியாது என்பது 1960 களின் பிற்பகுதியளவில் அமெரிக்கத் தலைவர்களுக்கு தெளிவாகத் தெரியவந்துவிட்டது.

1968 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட றிச்சர்ட் நிக்சன் " கௌரவத்துடனான சமாதானத்தைக் " காண்பதற்கு கம்யூனிஸ்ட் வடவியட்நாமுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பொறுப்பை  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கீசிங்கரிடம் ஒப்படைத்தார். தாங்கள் ஏற்கெனவே தோல்வியடைந்துவிட்ட ஒரு போரை அமெரிக்கர்கள் உண்மையில் நீடித்துக்கொண்டிருந்தார்கள்.

வடவியட்நாமை தோற்கடிப்பதல்ல, அமெரிக்க நேசஅணியான தென்வியட்நாமை கம்யூனிஸ்டுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதை தடுப்பதே இலக்காக இருந்தது.பென்டகன் ஆவணங்களை பகிரங்கப்படுத்திய டானியல் எல்ஸ்பேர்க் அமெரிக்காவின் அந்த அணுகுமுறையை 'முட்டுக்கட்டை இயந்திரம் ' ( Stalemate machine  ) என்றுவர்ணித்தார்.

 ஆப்கானிஸ்தானில் இன்று அமெரிக்கா கடைப்பிடிக்கின்ற அணுகுமுறைக்கும் அன்று வியட்நாமில் கையாண்ட தந்திரோபாயத்துக்கும் இடையில் இருக்கக்கூடிய ஒத்ததன்மைகளை எவரும் அவதானிக்காமல் இருக்கமுடியாது. 18 வருடகால சண்டைகளுக்குப் பிறகு ( வியட்நாமில் அமெரிக்கா நேரடியாக இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்ட காலத்தையும் விட நீண்டகாலம் ) ஆப்கான் போரில் வெற்றிபெற முடியாது என்பதை அமெரிக்கா விளங்கிக்கொண்டிருக்கிறது.

தலிபான்களைத் தோற்கடிப்பது அல்ல, அவர்கள் தற்போதைக்காவது தலைநகர் காபூலைக்கைப்பற்றுவதை தடுப்பதே அமெரிக்காவின் குறிக்கோளாகும்.நீண்டகால அனுபவமுடைய இராஜதந்திரி சல்மே காலீல்சாத் அவர்களே புதிய கீசிங்கர். (ஆப்கான் அமெரிக்கரான இவர் 2018 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் ஆப்கான் நல்லிணக்கத்துக்கான விசேட பிரதிநிதியாக சேவையாற்றுகிறார் ) வியட்நாமை விட்டு வெளியேற நிக்சன் விரும்பியதைப் போன்று ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற டொனால்ட் ட்ரம்ப் விரும்புகிறார்.

வியட்நாமில் அமெரிக்கத் தலையீடு பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியின் இறுதி வருடங்களில் இருந்து தொடங்கியது.வியட் மின் கெரில்லாக்களுக்கு எதிராக பிரான்ஸை அமெரிக்கா முதலில் ஆதரித்தது. 1954 ஆம் ஆண்டில் வியட்நாமை விட்டு பிரான்ஸ் வெளியேறிய பிறகு கம்யூனிஸ்டுகள் தலைமையிலான வடவியட்நாமுக்கு எதிராக தென்வியட்நாமை அமெரிக்கா ஆதரித்தது.

ஆரம்பத்தில் அமெரிக்காவின் ஈடுபாடு ஆலோசனை வழங்குவதுடன் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது.

ஆனால், அமெரிக்க நாசகாரி கப்பலான யூ.எஸ்.எஸ். மடொக்ஸை வட வியட்நாமியர்களின் கண்ணிவெடிப்படகுகள் ரொன்கிம் வளைகுடாவில் வைத்து 1964 ஆகஸ்டில்  தாக்கியதை அடுத்து லிண்டன் ஜோன்சன் நிருவாகம் அமெரிக்காவின் தலையீட்டை படிப்படியாக தீவிரப்படுத்தியது. தலையீடு உச்சக்கட்டத்தில் இருந்தபோது 1968 ஆம் ஆண்டில் வியட்நாமில் குவிக்கப்பட்ட அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கை 549, 500 ஆகும்.2001 செப்டெம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து  பயங்கரவாதத்துக்கு எதிரான போரை முன்னெடுத்த அமெரிக்கா ஆப்கானிஸ்தானுக்குள் படைகளைஅனுப்பியது. 

ஆப்கான் போரின் உச்சக்கட்டத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான அமெரிக்க துருப்புகள் அந்த நாட்டில் நிலைகொண்டிருந்தன. இவ்வளவு பெருந்தொகைப் படைகளுடன் உயர்தரமான விமானப்படையும் பயன்படுத்தப்பட்டபோதிலும்,அமெரிக்கா போரில் சிக்குப்பட்டுப்போனது.ஆப்கானிஸ்தானில் உறுதிப்பாட்டை ஏற்படுத்த அது தவறிவிட்டது.

பலவீனமான நிலையில் இருந்து

வியட்நாமில் அமெரிக்கா பலவீனமான ஒரு நிலையில் இருந்துகொண்டே பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருந்தது. 1960 களின் பிற்பகுதியளவில் அமெரிக்க மக்களின் அபிப்பிராயம் பெருமளவுக்கு  போருக்கு எதிராகத் திரும்பியிருந்தது. பாரியளவில் படைகள் குவிக்கப்பட்டிருந்த போதிலும், அமெரிக்காவும் அதன் தென்வியட்நாமிய நேச அணிகளும் போரில் கணிசமானளவுக்கு முன்னேற்றங்களைக்  காணத்தவறின. தெற்கில் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கத்தில் இருந்த கிராமங்களில் ' தேடிக்கண்டு பிடித்து நிர்மூலஞ்செய்யும் ' அமெரிக்க நடவடிக்கைகளும் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட படுபயங்கரமான விமானக்குண்டு வீச்சுகளும் வியட்நாமியர்கள் மத்தியில் சீற்றத்தையே தூண்டிவிட்டன. 

இரண்டாவது உலகப்போரின்போது நாசி ஜேர்மனிக்கு எதிரான நேசநாடுகளின் படைகள் வீசிய குண்டுகளை விடவும் மூன்று மடங்கு குண்டுகளை வியட்நாமில் அமெரிக்கா வீசியது.தவிரவும், அமெரிக்காவின் ஆதரவுடனான தென்வியட்நாம் ஆட்சி மக்களின் ஆதரவு இல்லாததாகவும் ஒடுக்குமுறைத்தன்மையானதாகவும் பலவீனமானதாகவும் இருந்தது. ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஒரு சில மாதங்களில் தெற்கின் தலைநகர் சைகோனுக்கு மேற்கொண்ட ஒரு விஜயத்தின்போது நிக்சன் சமாதானத்தைக் காண்பதாக உறுதியளித்ததுடன் அதற்கு கைம்மாறாக கம்யூனிஸ்டுகளின் நடவடிக்கைகள் அமையவேண்டும் என்று கேட்டார். உடன்பாடொன்றைக் காணவேண்டியது அவரைப் பொறுத்தவரை அவசரத்தேவையாக இருந்தது. அதற்கு கீசிங்கர் தான் கதி.

நிக்சன் முதலில் போரை ' வியட்நாம்மயமாக்கத் ' தொடங்கினார் ; அதாவது வியட்நாமில் அமெரிக்கப்படைகளின் பிரசன்னத்தைக் குறைத்து தரைச்சண்டையில் நேரடியாகப் பங்கேற்பதிலிருந்து கவனத்தை பயிற்சியளிப்பதிலும் ஆலோசனை வழங்குவதிலும் திருப்புவது. அதேவேளை,விமானக்குண்டு வீச்சுக்களை தொடருவது. இதனிடையே, வடவியட்நாம் புரட்சிவாதியும் இராஜதந்திரியுமான லீ டக் தோவுடன் கீசிங்கர் பேச்சுவார்த்தையை தொடங்கினார். பேச்சுவார்த்தையில்  முட்டுக்கட்டை ஏற்பட்டபோது ஒரு விட்டுக்கொடுப்பு நடவடிக்கையாக தெற்கில் இருந்து படைகளை விலக்கிக்கொள்ள அமெரிக்கா முன்வந்தது. 

   

1973 ஆம் ஆண்டில் அமெரிக்காவும் வடவியட்நாமும் தென்வியட்நாமின் பிரதிநிதிகளும் தெற்கின் கம்யூனிஸ்ட் கெரில்லாக்களான வியட் கொங்கும் பாரிஸ் சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.வடக்கும் தெற்கும் யுத்தநிறுத்தத்துக்கு இணங்கிக்கொண்டு சமாதானப் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தன.அதேவேளை, வியட்நாமில் இருந்து படைகளை விலக்கிக்கொள்ள அமெரிக்கா இணங்கியது.

ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா பலவீனமான ஒரு நிலையில் இருந்துகொண்டே பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருக்கிறது. போர் ஒரு முட்டுக்கட்டை நிலைக்குள் பிரவேசித்து நீண்டகாலம் கடந்துவிட்டது.ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க நேச அணிகள் பிளவுபட்டு நிற்கின்றன. அமெரிக்காவின் ஆதரவுடனான காபூல் அரசாங்கம் உட்சண்டைகளும் ஊழலும் நிறைந்ததாக இருக்கிறது.தலைநகரில் கூட பொதுமக்களுக்கு அடிப்படைப் பாதுகாப்பை உறுதிசெய்ய இயலாமல் பாதுகாப்பு படைகள் திணறிக்கொண்டிருக்கின்றன.

 நிக்சனின் வியட்நாம் மயமாக்கத்தைப் போன்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் போரை ' ஆப்பான்மயமாக்கத் ' தொடங்கினார்.அதாவது அவர் பெரும்பாலான துருப்புகளை விலக்கிக்கொண்டு எஞ்சியிருக்கும் படையினரை பயிற்சியளிப்பதற்கும் ஆலோசனை வழங்குவதற்கும் பயன்படுத்தினார்.ஆப்கான் போரும் அமெரிக்க மக்களின் ஆதரவைப் பெறவில்லை

வெளிநாடுகளிலான அமெரிக்கத் தலையீடுகளை முடிவுக்குக் கொண்டுவரப்போவதாக தேர்தல் பிரசாரங்களின்போது உறுதியளித்த ட்ரம்ப் அதை முடித்துவைக்க விரும்புகிறார்.ஆனால், அமெரிக்காவினால் ஒருதலைப்படசமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறமுடியாது.அதுவும் குறிப்பாக தலிபான்கள் தாக்குதல்களைத் தீவீரப்படுத்தியிருக்கும் நிலையில் அவ்வாறு செய்யவே முடியாது.அவ்வாறு செய்தால் ஏற்கெனவே சேதப்பட்டிருக்கும் உலகின் முதன்மையான இராணுவ வல்லமையைக்கொண்ட நாடு என்ற அமெரிக்காவின் பெயருக்கு நிலையான கறை ஏற்பட்டுவிடும்.அதனால் அமெரிக்காவுக்கு ஒரு உடன்படிக்கை தேவைப்படுகிறது ; அதைக் கண்டுபிடிக்கவேண்டியதே தூதுவர் காலீல்சாத்தின் பணியாகும்.

அனுகூலமான நிலையில் தலிபான்

காலீல்சாத் ஏற்கெனவே தலிபான்களுடன் கட்டாரின் டோஹா நகரில் பல சுற்றுப்பேச்சுவார்த்தைளை நடத்தியிருக்கிறார். வியட்நாமில் நடந்ததைப் போன்றே ஆப்கானிஸ்தானிலும் கிளர்ச்சியாளர்களின் பிரதான கோரிக்கை அமெரிக்க துருப்புக்கள் முற்றாக விலக்கிக்கொள்ளப்படவேண்டும் என்பதேயாகும். அண்மைய செயதிகளின்படி, அமெரிக்காவும் தலிபான்களும் சமாதானத்துக்கான திட்டவரைவு ஒன்றுக்கு இணங்கியிருக்கிறார்கள் ; அமெரிக்க படைவிலகலுக்கு கைம்மாறாக பயங்கரவாதிகளினால் ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தை தலிபான்கள் வழங்கவேண்டும்.

துருப்புக்கள் வெளியேற்றம்தொடர்பில் உடன்பாடொன்றைக் கண்டுவிடவேண்டும் என்ற அவசரத்தில் அமெரிக்கா ஏற்கெனவே இரு பெரிய விட்டுக்கொடுப்புக்களைச் செய்துவிட்டது.சமாதான முயற்சிகளில் இருந்து ஆப்கான் அரசாங்கம் விலக்கிவைக்கப்படவேண்டும் என்ற தலிபான்களின் கோரிக்கைக்கு அமெரிக்கா இணங்கியது.தலிபான்கள் காபூல் அரசாங்கத்தை அங்கீகரிக்கவில்லை என்பதுடன் வெளிநாட்டுத் துருப்புக்கள் வெளியேறிய பின்னர் மாத்திரமே அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர்கள் தெளிவாகக் கூறிவிட்டார்கள். 

இரண்டாவதாக, யத்தநிறுத்தம் ஒன்று இல்லாத பட்சத்திலும் கூட அமெரிக்கா பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தது.அதன் விளைவாக சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற வேளையிலும் கூட தலிபான்கள் தங்களது பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தினார்கள். இறுதியாக இலககுவைக்கபபட்டவர் செப்டெம்பர் 28 தேர்தலில் உப  ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் புனாய்வுத்துறையின் முன்னாள் தலைவரான அம்ருல்லா சாலீ ஆவார். ஜூலை 28 நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் காயமடைந்தார்.

செப்டெம்பர்  முதலாம் திகதியளவில் உடன்பாடொன்றை எட்டிவிடமுடியும் என்று அமெரிக்க நம்பியிருக்கிறார்கள்.அமெரிக்கா வெளியேறியதும் ஆப்கான் அரசாங்கத்துக்கு என்ன நேரும் என்பது எவருக்கும் தெரியவில்லை. வியட்நாமில் இருந்து அமெரிக்கா வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டபோது, தெற்கினதும் வடக்கினதும் அரசாங்கங்கள் யுத்தநிறுத்தத்தை தவிர வேறு எந்தவொரு இணக்கப்பாட்டையும் கண்டிருக்கவில்லை.பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து முன்னெடுத்து இறுதி உடன்பாடொன்றைக் காண்பதே திட்டமாக இருந்தது. யுத்தநிறுத்தம் நீண்டகாலம் நீடிக்கவில்லை. அமெரிக்கா வெளியேறி இரு வருடங்களுக்குப் பிறகு கம்யூனிஸ்டுகள் சைகோனை கைப்பற்றினார்கள்.அட்டைகளினாலான கட்டிடம் போன்று அரசாங்கம் நிலைகுலைந்து வீழ்ந்தது.

ஆப்கானிஸ்தான் விவகாரத்தைப் பொறுத்தவரை, அமெரிக்கா வெளியேறுவதற்கு தயாராயிருக்கின்ற போதிலும்,  அரசாங்கத்துக்கும் தலிபான்களுக்கும் இடையில் யுத்தநிறுத்தம் ஒன்றுகூட இன்னமும் இல்லை. தலிபான்களே வெற்றியடையும்தரப்பினராக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வியட் கொங்கைப் போலன்றி தலிபான்கள் நவீன வாழ்க்கை முறைக்கும் பெண்களின் உரிமைகளுக்கும் சிறுபான்மையினத்தவர்களுக்கும் எதிரான ஒரு அடிப்படைவாத இயந்திரமாகும். அவர்களது முன்னைய ஆட்சியி்ல் மதப்பிரிவுகளுக்கும் குலக்குழுக்களுக்கும் இடையிலான வன்முறைகள் உச்சக்கட்டத்தில் இருந்தன.

தலிபான்கள் பிரச்சினையின் ஒரு அங்கமே தவிர, தீர்வின் அங்கம் அல்ல.கம்யூனிஸ்டுகள் வியட்நாமை ஒன்றிணைத்து ஒரேநாடாக்கினார்கள்.ஆரம்ப வருடங்களில் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் பொருளாதாரத்தை நவீனமயமாக்கி வியட்நாமை ஆசியாவின் ஒரு பொருளாதார வல்லமைகொண்ட நாடாகக் கட்டியெழுப்பினார்கள்.ஆனால், ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை, நிலைவரம் இருள்சூழ்ந்ததாகவே இருக்கிறது.

 ( த இந்து )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்