ஜனா­தி­பதி தேர்தல்  பரப்பு அதி­க­ரித்து வரு­கின்ற சூழலில்   நாளை 11ஆம்­ தி­கதி  வெளியா­க­வுள்ள  முக்­கிய அறி­விப்­பா­னது நாட்டின் தேசிய அர­சி­யலில்   ஒரு முக்­கிய  தாக்­கத்தை  ஏற்­ப­டுத்­தலாம் என  எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.  நாளைய தினம்   முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தரப்பில் ஜனா­தி­பதி வேட்­பாளர் அறி­விக்­கப்­ப­ட­வுள்­ள­தாக மிகப்­ப­ர­வ­லாக  அந்தத் தரப்புப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றது. இந்த சூழ­லி­லேயே நாளை  வெளி­யாக இருக்­கின்ற இந்த அறி­விப்­பா­னது மிக முக்­கி­ய­மாக இருக்கும் என எதிர்பார்க்­கப்­ப­டு­கின்­றது. 

தற்­போ­தைய அர­சியல் சூழலில்   இரண்டு பிர­தான முகாம்­களிலிருந்து   ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் கள­மி­றக்­கப்­ப­ட­வுள்­ளனர்.  மூன்­றா­வது அணி  உரு­வாக்­கப்­படும் சாத்­தியம் மிகக்­கு­றை­வா­கவே காணப்­ப­டு­வ­தா­கவும் எனவே  இர­ண்டு முகாம்­க­ளி­லி­ருந்தும்  இரண்டு  பலம்­பொ­ருந்­திய வேட்­பா­ளர்கள் ஜனா­தி­பதி தேர்­தலில் கள­மி­றக்­கப்­ப­டலாம் எனவும்  மிகவும் பர­வ­லாக  எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியைப் பொறுத்­த­வ­ரையில் யார் வேட்­பாளர் என்ற விடயம் இது­வரை தீர்­மா­னிக்­கப்­ப­டாமல் உள்­ள­துடன்  தொடர்ந்து அக்­கட்­சிக்குள் ஒரு நெருக்­கடி நிலைமை காணப்­ப­டு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. அதா­வது   முக்­கி­ய­மான மூன்­றுபேர்  ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சார்பில்  ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளாக வெளிக்­காட்­டப்­ப­டு­கின்ற நிலையில்    சிக்கல் நிலை இன்னும் தீர்க்­கப்­ப­டா­ம­லேயே நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது.  அதே­போன்று ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இந்த ஜனா­தி­பதி தேர்­தலில் ஒரு  முக்­கிய வகி­பா­கத்தை வகிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.  சுதந்­தி­ரக்­கட்­சியைப் பொறுத்­த­வ­ரைக்கும் இது­வ­ரைக்கும்  தாம் ஒரு   வேட்­பா­ளரை   கள­மி­றக்­குவோம் என தெரி­வித்­து­வ­ரு­கி­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே  தமது  ஜனா­தி­பதி வேட்­பாளர் என்­பதை மிகத்திட்­ட­வட்­ட­மாக   சுதந்­தி­ரக்­கட்சி அறி­வித்து வரு­கி­றது.  எனினும் சுதந்­தி­ரக்­கட்சி  ஏதா­வது ஒரு தரப்­புடன் இணைந்து  எதிர்­வரும்  ஜனா­தி­பதி தேர்­தலை எதிர்­கொள்ளும் என்றே எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.  அதா­வது ஜனா­தி­பதி தேர்­தலில்  மும்­முனை  போட்டி   இருக்­காது என்றும் இரு­மு­னைப்­போட்­டியே இருக்கும் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்ற சூழலில் சுதந்­தி­ரக்­கட்சி   தனித்­துக் ­க­ள­மி­றங்­குமா என்­பது சந்­தே­கத்­திற்­­கி­ட­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. 

இவ்­வா­றான அர­சியல் பின்­ன­ணியில் இரண்டு பிர­தான முகாம்­க­ளி­லி­ருந்தும்  வேட்­பா­ள­ராக வரப்­போ­கின்­ற­வர்கள் யார் என்­பது தொடர்பில்   மக்கள் மத்­தியில்  எதிர்­பார்ப்பு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.  இதற்­கி­டையில்   அர­சியல் கட்­சி­களின் ஜனா­தி­பதி தேர்­தலை நோக்­கிய காய் நகர்த்­தல்­களும்  அர­சியல்  இரா­ஜ­தந்­திர அணு­கு­மு­றை­களும்  மிக வேக­மாக சூடு­பி­டித்து வரு­கின்­றன.  பேரம் பேசும்  செயற்­பா­டு­களும்   யார் யாருக்கு ஆத­ரவு வழங்­கு­வது  தொடர்­பான விட­யங்­களும் பரந்த மட்­டத்தில் நாடு முழு­வதும் இடம்­பெ­று­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. அர­சியல் கட்­சிகள் பொது அமைப்­புக்கள் என  அனைத்துத் தரப்­பி­னரும் அடுத்த ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பி­லேயே   பாரிய அளவில்  அக்­கறை செலுத்தி வரு­கின்­றனர்.  இந்த நிலை­யி­லேயே நாளை 11ஆம் திகதி  மஹிந்த ராஜ­பக் ஷ தரப்பின்  ஜனா­தி­பதி வேட்­பாளர் யார் என்­பது தொடர்­பான அறி­விப்பு  வெளி­யாக இருக்­கி­றது. இந்த அறி­விப்­பின்­போது  ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலை­வ­ராக   மஹிந்த ராஜ­பக் ஷ அறி­விக்­கப்­ப­டுவார் என்றும் அக்­கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர்   பிர­க­ட­னப்­ப­டுத்­துவார் என்றும்   அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

அந்­த­வ­கையில்  மஹிந்த தரப்பில்  ஜனா­தி­பதி வேட்­பாளர் யார் என்ற  கேள்­விக்கு  கிட்­டத்­தட்ட பதில் கிடைத்­த­தா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது.  மஹிந்த ராஜ­பக் ஷ அணியைப் பொறுத்­த­வ­ரையில் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் பலரின் பெயர்கள் மிகப்­பி­ர­ப­ல­மாக பேசப்­பட்டு வரு­கின்­றன.  முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ, முன்னாள்   அமைச்சர் சமல் ராஜ­பக் ஷ,  மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் தினேஷ் குண­வர்த்­தன மற்றும் குமார் வெல்­கம ஆகி­யோரின் பெயர்கள்  எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷவின்  பரி­சீ­ல­னையில் உள்­ளன. ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பெயரும்   இந்தப் பட்­டி­யலில் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

இதில் யாரை  மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வு­ செய்­யப்­போ­கின்றார் என்­பதே தற்­போ­தைய   கேள்­வி­யாக இருக்­கின்­றது. எப்­ப­டி­யி­ருப்­பினும் மஹிந்த தரப்பிலிருந்து வரு­கின்ற தக­வல்­களின்  பிர­காரம்  முன்னாள்  பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷவே  ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக   கள­மி­றக்­கப்­படும் சாத்­தியம் இருப்­ப­தாக மிகப்பர­வ­லாக  பேசப்­ப­டு­கின்­றது. 

அந்­த­வ­கையில் நாளைய  அறி­விப்­பின்­போது  கோத்­த­பாய ராஜ­பக் ஷவே மஹிந்த தரப்பின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக   அறி­விக்­கப்­ப­டலாம் என்று  மிக அதி­க­மா­கவும் பர­வ­லா­கவும்   அலசி ஆரா­யப்­ப­டு­கின்­றது.  அவர்  வேட்­பா­ள­ராக வரு­வ­தற்­கான சாத்­தி­யமே அதிகம் இருப்­ப­தாக கோடிட்­டுக்­காட்­டப்­ப­டு­கின்­றது. அது­மட்­டு­மன்றி கோத்­த­பாய ராஜ­பக் ஷ ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக  வரு­வதன்  சாதக, பாத­க­ தன்­மை­களும் விரி­வாக  ஆரா­யப்­ப­டு­கின்­றது. 

உண்­மையில்   கோத்­த­பாய ராஜ­பக் ஷ வேட்­பா­ள­ராக நாளைய தினம் அறி­விக்­கப்­பட்டால் அடுத்து அர­சியல் களத்தில் என்ன நடக்கும் என்­பது ஒரு மிகப்­பெ­ரிய விவா­தப்­பொ­ரு­ளாகும். முக்­கி­ய­மாக கோத்­த­பாய ராஜ­பக் ஷ­வினால்  தமிழ், மற்றும் முஸ்லிம் வாக்­கு­களை  பெற முடி­யாது என்ற கருத்து முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது.  இந்த சூழலில்   இந்த விட­யத்தை  மஹிந்த ராஜ­பக் ஷ தரப்பு எவ்­வாறு கையா­ளப்­போ­கின்­றது என்­பதே  முக்­கி­ய­மான விட­ய­மாகும். அவ்­வா­றான குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­ப­டு­கின்ற சூழலில் அதனைத் தகர்த்­தெ­றி­வ­தற்கு மஹிந்த ராஜ­பக் ஷ  தரப்பு என்ன அணு­கு­மு­றையை செய்­யப்­போ­கின்­றது?

 அடுத்த மூன்­று ­மாத காலத்­திற்கு   இந்த விட­யமே ஒரு மிக முக்­கி­யத்­து­வ­மிக்க அம்­ச­மாக காணப்­படும். அதா­வது   கோத்­த­பாய ராஜ­பக்ஷ  ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்டால் அடுத்து எவ்­வா­றான அர­சியல் அணு­கு­மு­றைகள், காய்­ந­கர்த்­தல்கள் இடம்­பெறும் என்­பது குறித்து  பார்க்­கப்­ப­ட­வி­ருக்­கி­றது. இது பல கோணங்­களில் ஆரா­யப்­படும்  விட­ய­மாக காணப்­ப­டு­கின்­றது. முக்­கி­ய­மாக கோத்­த­பாய ராஜ­பக் ஷவின்  பொரு­ளா­தாரக்  கொள்­கைகள் என்ன?  இனப்­பி­ரச்­சினை தொடர்­பாக அவ­ரது நிலைப்­பாடு என்ன என்­பன குறித்து அவர் மிகப் பகி­ரங்­க­மாக அறி­விக்­க­வேண்டி ஏற்­படும். இந்த அறி­விப்­புக்­களின்  பின்னர் தேசிய அர­சி­யலில் பல முக்­கிய விட­யங்கள்  நிக­ழலாம். 

கோத்­த­பாய ராஜ­பக் ஷவே மஹிந்த  தரப்பில் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக வருவார் என  அதி­க­மாக நம்­பப்­ப­டு­கின்ற நிலையில் கூடிய அளவில் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற சூழலில் அதன்­பின்னர்  எவ்­வா­றான விட­யங்கள்  அர­சி­யலில் இடம்­பெறும் என்­பது முக்­கிய நிலை­மை­யாகும். குறிப்­பாக  தற்­போது   உத்­தி­யோ­கப்­பற்­றற்ற முறையில்   மஹிந்­த­ த­ரப்­பி­லி­ருக்கும் டிலான் பெரேரா போன்­ற­வர்கள்  கோத்­த­பாய ராஜ­பக் ஷ தொடர்பில் முழு­மை­யான விருப்­பத்தை கொண்­டி­ருக்­க­வில்லை.   ஆனாலும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கு எதி­ராக   யார்  வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கி­னாலும்  அவ­ருக்கு ஆத­ர­வ­ளிக்­க­வேண்டும் என்று டிலான் பெரேரா  மிகப் பகி­ரங்­க­மாக அறி­வித்து வரு­கின்றார். கோத்­த­பா­யதான் ஜனா­தி­பதி  வேட்­பாளர் என்று முடி­வா­கி­விட்டால் அவ­ருடன் தாம் தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்தி   ஒரு நிலைப்­பாட்­டுக்கு  வர­வேண்டி  ஏற்­படும் என்று டிலான் பெரேரா கூறி­வ­ரு­கின்றார். 

தற்­போது மஹிந்த தரப்பில் இருக்­கின்ற  வாசு­தேவ நாண­யக்­கா­ர­வுக்கும் இந்த சிக்கல் இருப்­ப­தாக தெரி­கின்­றது. அவரும்   கோத்­த­பாய ராஜ­பக் ஷ  ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரா­கினால் தேசிய பிரச்­சினை தீர்வு தொடர்பில் அவ­ரது நிலைப்­பாடு எவ்­வாறு இருக்கும் என கேள்வி எழுப்­பி­யி­ருக்­கின்றார். 

கோத்­த­பாய இறுதி வேட்­பா­ள­ரா­கினால்  அவரை ஆத­ரிப்­பதைத்தவிர தமக்கு  வேறு வழி­யில்லை  என்றும்  எனினும்   அவ­ரிடம்  இனப்­பி­ரச்­சினை தீர்வு என்­பது தொடர்­பான நிலைப்­பாடு அறி­யப்­ப­ட­வேண்டும் என்றும்  வாசு­தேவ நாண­யக்­கார கூறி­வ­ரு­கின்றார். இவ்­வாறு கோத்­த­பாய ராஜ­பக் ஷ  தொடர்பில்  சிறு­பான்மை மக்­களை தெளிவு­ப­டுத்­த­ வேண்­டிய   பல விட­யங்கள்  மஹிந்த ராஜ­பக் ஷ­வி­டமும் காணப்­ப­டு­கின்­றன.  இதே­வேளை   பொது­ஜன பெர­மு­னவும் ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணை­வது தொடர்­பாக பேச்­சு­வார்த்தை நடை­பெற்­று­வ­ரு­கின்­றன. அந்தப் பேச்­சு­வார்த்­தைகள் தற்­போ­து­வரை மிகப்­பெ­ரிய வெற்­றியை  கொடுத்­த­தாக தெரி­ய­வில்லை. இந்த சூழலில்  சில தினங்­க­ளுக்கு முன்னர்  எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் சந்­தித்து   முக்­கிய கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­பட்­டனர்.  இரண்டு தரப்­பி­ன­ருக்­கு­மி­டை­யி­லான  பரந்­து­பட்ட கூட்­டணி  மற்றும்  ஜனா­தி­பதி   வேட்­பாளர்  தொடர்­பி­லேயே விரி­வாக பேசப்­பட்­டி­ருக்­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும்  ஜனா­தி­பதி வேட்­பாளர் பட்­டி­யலில் இருப்­பதால்  இந்த சந்­திப்பு அர­சியல் களத்தில் மிக முக்­கி­யத்­துவமிக்­க­தாக    நோக்­கப்­ப­டு­கின்­றது. 

எப்­ப­டி­யி­ருப்­பினும் கோத்­த­பாய ராஜ­பக் ஷ வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்டால் பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் மஹிந்­த­ ராஜ­பக் ஷ சில அணு­கு­மு­றை­களை  முன்­னெ­டுக்­க­ வேண்டியேற்­படும். குறிப்­பாக சிறு­பான்மை மக்கள் விட­யத்தில் அவர் என்ன செய்­யப்­போ­கின்றார் என்­ப­தையே அனை­வரும்   எதிர்­பார்த்து நிற்­கின்­றனர்.   நாளைய தினம்   இந்த அறி­விப்பு வெளி­யா­கி­விடும். கிட்­டத்­தட்ட கோத்­த­பாய ராஜ­பக் ஷவே    வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­ப­டுவார் என பர­வ­லாக  பேசப்­ப­டு­கின்­றது. 

 மறு­புறம் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்குள்  ஜனா­தி­பதி வேட்­பாளர்  விவ­காரம் தொடர்பில் தொடர்ந்து சிக்­கல்­களும்  நெருக்­க­டி­களும் நீடிப்­ப­தா­கவே தெரி­கின்­றது.   அமைச்சர் சஜித் பிரே­ம­தாச, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க  மற்றும்   சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய  ஆகி­யோரின் பெயர்கள்    ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் ஜனா­தி­பதி  வேட்­பாளர்   விட­யத்தில்  பேசப்­பட்டு வரு­கின்­றது.  எனினும் இது­வரை   இறுதி முடிவு  எடுக்­கப்­ப­டாத நிலை­மையே நீடிக்­கின்­றது. அமைச்சர் சஜித் பிரே­ம­தாச இம்­முறை   மிக உத்­வே­கத்­துடன்  தான் ஜனா­தி­பதி  தேர்­தலில் போட்­டி­யிட தயார் என்­பதை அறி­வித்து வரு­கின்றார். மக்கள் சந்­திப்­புக்­க­ளிலும்  இதனை  மிகப்­ப­கி­ரங்­க­மாகவே தெரி­வித்து வரு­கின்றார். 

இம்­முறை   வேட்­பாளர் விட­யத்தை விட்­டுக்­கொ­டுக்­கப்­போ­வ­தில்லை என்றும் சஜித் பிரே­ம­தாச  திட்­ட­வட்­ட­மாக கூறி­வ­ரு­கிறார்.  அதே­போன்று ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் செயற்­குழு  கூட்­டத்­திலும் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ர­வான குரல்கள் எழத்­தொ­டங்­கி­யுள்­ளன.  ஆனால் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க  இம்­முறை வேட்­பாளர்   விட­யத்தை விட்­டுக்­கொ­டுப்­ப­தாக இல்லை என்­பதும் தெரி­கின்­றது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தான்  போட்­டி­யி­ட­வேண்டும் அல்­லது   சபா­நா­யகர்   கரு ஜய­சூ­ரிய போட்­டி­யி­டலாம் என்ற  நிலைப்­பாட்­டி­லேயே இருப்­ப­தாக அறி­ய­மு­டி­கின்­றது. 

 இந்த விட­யத்­திற்கும் தீர்­வு­கா­ணப்­ப­டா­துள்­ள­துடன்   சிக்கல் நிலை நீடிக்­கி­றது.  இதன் கார­ண­மாக   ஐக்­கிய தேசி­யக்­கட்சி தலை­மை­யி­லான பரந்­து­பட்ட தேசிய  ஜன­நா­யக கூட்­ட­ணியை அமைப்­ப­திலும்    தாமதம் ஏற்­பட்­டுள்­ளது.  கடந்த திங்­கட்­கி­ழமை கைச்­சாத்­தி­ட­வி­ருந்த   தேசிய ஜன­நா­யக கூட்­டணி குறித்த ஒப்­பந்தம் பிற்­போ­டப்­பட்­டி­ருக்­கின்­றது.  அதன் கட்­ட­மைப்பு தொடர்பில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்குள் முரண்­பா­டான கருத்­துக்கள் நில­வு­கின்­றன.  இதன் கார­ண­மாக   இந்த  தேசிய ஜன­நா­யக கூட்­ட­ணியை அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்கை   பிற்­போ­டப்­பட்­டி­ருக்­கின்­றது.  எனினும்  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க  இந்த கூட்­ட­ணியை அமைத்து ஜனா­தி­பதி தேர்­தலை  எதிர்­கொள்­ள­வேண்டும் என்­பதில் மிக உறு­தி­யாக இருக்­கிறார். 

இந்த விடயம்  தொடர்பில்   ஐக்­கிய தேசி­யக்­கட்சித் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கும் அக்­கட்­சியின் பிரதித் தலை­வரும் அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தா­ச­வுக்­கு­மி­டையில்   சில தினங்­க­ளுக்கு  முன்னர் நடை­பெற்ற   பேச்­சு­வார்த்­தையும்  இணக்­கப்­பா­டின்றி முடி­வ­டைந்­தி­ருக்­கின்­றது. இதில்  இரு­வ­ருமே  தாம்  ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக வேண்­டு­மென்ற நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருந்­துள்­ள­துடன்  அதனை  வலி­யு­றுத்­தியும் இருக்­கின்­றனர்.  இந்­நி­லை­யி­லேயே  இரு­வ­ருக்­கு­மி­டை­யி­லான இந்த சந்­திப்பு இணக்­கப்­பா­டின்றி முடி­வ­டைந்­தி­ருக்­கின்­றது

இந்த சந்­திப்­பின்­போது கருத்து வெளி­யிட்ட பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க   தான் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­வ­தா­கவும் சஜித் பிரே­ம­தா­சவை  பிர­த­ம­ராக நிய­மிப்­ப­தா­கவும் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.  எனினும் இந்த யோச­னையை நிரா­க­ரித்த   அமைச்சர் சஜித் பிரே­ம­தாச தான்  ஜனா­தி­பதி  வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­வ­தா­கவும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை  பிர­த­ம­ராக நிய­மிப்­ப­தா­கவும் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.  எனினும்  இந்த யோச­னையை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நிராகரித்திருக்கின்றார். 

தற்போதைய அரசியல் சூழலில்   பிரதான கட்சிகள்  வேட்பாளரை தெரிவு செய்வது என்பது கடினமான விடயமாகவே காணப்படுகின்றது.  தமது முகாமில் இருக்கின்ற அனைத்துத் தரப்பினரதும் ஆதரவைப் பெறுவது  சவாலான விடயமாகும். அதேபோன்று  அனைத்து இனத்தவர்களையும்    அரவணைத்து செல்கின்ற   வேட்பாளர்களை  தெரிவு செய்கின்ற கட்டாயம் தேசிய கட்சிகளுக்கு காணப்படுகின்றது. அவ்வாறான ஒரு வரை தெரிவுசெய்வதும்  மிகவும் கடினமானதாகவே இருக்கின்றது. 

அந்தவகையில்  ஐக்கிய தேசியக் கட்சியும் மஹிந்த தரப்பும்  இரண்டு பிரதான வேட்பாளர்களை  களமிறக்கப் போவது   உறுதியாகிவிட்டது. சுதந்திரக் கட்சியின் முடிவு இதுவரை உறுதியாக வெளிவராமல் இருக்கிறது.   

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து களமிறங்குமா? அல்லது சுதந்திரக்கட்சியானது அல்லது ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து பிரிந்து வருகின்ற ஒரு குழுவுடன் இணைந்து மூன்றாவது அணியை உருவாக்கி   தேர்தலில்   களமிறங்குமா?   என்பது பேசுபொருளாக காணப்படுகின்றது. 

ஆனால்  இந்த எந்தவிடயம் குறித்தும் கட்சிக்குள் இதுவரை இணக்கப்பாடான நிலைமை ஏற்படவில்லை என்பதே தெளிவான விடயமாக உள்ளது.  அல்லது  சுதந்திரக்கட்சி தனித்து வேட்பாளரை  களமிறக்குமா என்பதும்  மிக முக்கியமான விடயமாகும்.   கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற  உள்ளூராட்சிமன்றத் தேர்தல்  முடிவுகள்   கணக்கில் எடுக்கப்பட்டே கட்சிகளின்  கூட்டிணைவு அமையும் என்று  எதிர்பார்க்கப்படுகின்றது.  அதன்படி  மஹிந்த தரப்பின் நாளைய அறிவிப்பும்  எதிர்வரும் காலங்களில்  ஐ.தே.க. எடுக்கப்போகின்ற தீர்மானங்களும்  ஜனாதிபதி தேர்தல் விடயத்திலும் தேசிய அரசியலிலும் முக்கியத்துவமிக்கதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. யார்   வேட்பாளர்களாக  வரப்போகின்றார்கள் என்பதே அரசியல் ஆர்வலர்களின்   எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது என்பதே அரசியல்   யதார்த்தமாகும். 

- ரொபட் அன்­டனி